1 இரு மனம் விலகுது

பேருந்து நிறுத்தத்தில் லிசி பதட்டமாய் நின்றிருந்தாள். சீக்கிரம் பேருந்து வந்து விட்டால் தேவலை தான். ஆனால், அது உடனே வருவதற்கான அறிகுறி எதுவும் தட்டுப்படவில்லை. லிசியின் பயமெல்லாம் கண்ணன் மீது தான். எப்போதும் இவளுக்கும் முன்பாகவே வந்திருந்து காத்திருப்பவனை இன்று இன்னும் காணோம். நிம்மதியாயிருந்தது.

ஒரு மாதத்திற்கும் முன்பெல்லாம் கண்ணனால் ஒரு சின்னத் தொந்தரவும் இல்லை லிசிக்கு. வெறும் பார்வை மட்டுமே வீசிக் கொண்டிருப்பான். அந்தப் பார்வையிலும் தவறான நோக்கம் எதுவும் இருக்காது. பின் அவனாக இவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து எஃபெம் ரேடியோவில் கடலை போடுவது போல லொட லொடக்க ஆரம்பித்து விட்டான்.

தான் பேசுவது எதிராளிக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலையே படமாட்டான். “என் பெயர் கண்ணன்என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் இவள் பெயரை இது நாள் வரை கேட்கவே இல்லை. “இன்றைக்கு நீங்கள் கட்டியிருக்கும் சேலை அழகுஎன்பான். பாத்திரக்காரனுக்கு போட்டு விடலாம் போன்றிருக்கும் இவளுக்கு. “சுடிதார் உங்களுக்கு எடுப்பாய் இல்லையேஎன்பான். இவன் யார் தெல்லாம் சொல்வதற்கு?

பிடிக்கலைஎன்று இவள் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவனாய் கண்ணன் இல்லை. “என்னை மாதிரி பையனை பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்என்று திரைப்படத்தில் தனுஷ் பேசுவது போல பேசினான். ’ஒருவேளை அது உண்மை தானோ?’ என்றுகூட இவளுக்கு சந்தேகமாயிருந்தது.

இந்தப் பேருந்திற்கு இன்று என்னவாயிற்று? கர்த்தரே! எஃப் எம் ரேடியோ வருவதற்குள் பேருந்தை அனுப்பி விடுங்களேன். கர்த்தர் இவள் வேண்டுகோளுக்கு செவிமடுக்கவில்லை. அவருக்கு ஆடுகளை மேய்க்கும் வேலை இருக்கிறதல்லவா! கண்ணன் புன்னகை முகத்துடன் இவள் அருகில் வந்து நின்றான். லிசி முகத்தை திருப்பிக் கொண்டாள் வேறு புறமாக.

ஹலோகுட்மார்னிங்! அட ஏங்க தலையில கையை வைக்கறீங்க? குட்மார்னிங் சொன்னா திருப்பிச் சொல்லணும். அது தான் முறையும் வழக்கமும் கூட. நீங்க என்னடான்னாசரி விடுங்க, என்னைக் காணோமுன்னு தேடிட்டு இருந்தீங்க போல. சாரிங்க, வற்ற வழியில என்னோட சின்ன வயசு கிளாஸ்மேட் மீனா பிடிச்சுட்டா. கல்யாணம் ஆகி கையில பாப்பாவோட இருக்கா. எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. என்னோட ஆள்காட்டி விரலால உங்க பர்மிஷனோட உங்களை டச் பண்ணட்டுமா? ஷாக் அடிக்குதான்னு செக் பண்ணணும். தினமும் என்னை திட்டவாவது செய்வீங்கஇன்னிக்கு என்ன மெளன விரதமா?” என்றான்.

என்னோட வீடு, சர்ச் வாசல், போதாதுக்கு கம்பெனி வாசல் வரைக்கும் லோலோன்னு என் பின்னாடி வர்றீங்களே ஏன் இப்படி டார்ச்சர் குடுக்கறீங்க? வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாருங்க. என் பின்னாடி வர்றது வேஸ்ட்பேருந்தைக் காணோமே என்று பார்த்தபடி பேசினாள் லிசி.

ஒரு சுமாரான வாலிபன் ஒரு சுமாரான தேவதையை எதுக்குங்க சுத்துவான்? விரல் சப்புற குழந்தை மாதிரி நீங்க பேசக்கூடாது

எனக்குத் தெரியும். ஆனா எனக்கு அதெல்லாம் பிடிக்காத விஷயம். சாமி சாமியா இருப்பீங்க.. என்னை விட்டுடுங்க!”

சரி விடுங்க உங்களுக்குப் பிடிக்கலைன்னே வச்சுக்கலாம். உங்களை தனிமையில நான் சந்திக்கணும். உட்கார்ந்து பேசணும். இப்படி பஸ் ஸ்டாப்புல பேசுறது எனக்கும் சங்கடம் தான்

என்கிட்டே தனிமையில பேசுறதுக்கு என்ன இருக்கு?”

கரண்ட் பிரச்சனை தீர என்ன வழி? அணுமின் நிலையம் தேவையா? பெங்குவின் ஏன் வருஷத்துல ஒருமுறை மட்டும் துணையைத் தேடுது? இப்படி டிஸ்கஸ் பண்ணலாமுன்னு தான்

என்ன நிஜமாவே விளையாடறீங்களா? அதுக்கு நானா கிடைச்சேன்?”

உங்களுக்கே தெரியும் உலகத்துல எங்கே தேடினாலும் என்னை மாதிரி காதலனை நீங்க கண்டே பிடிக்க முடியாதுன்னு. அது சம்பந்தமாவே பேசுவோமே!”

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? நான் எங்கேயும் வரமாட்டேன். டைம் வேஸ்ட்

தங்கள் சித்தம் என் பாக்கியம். சரி விடுங்க.. நாம ஓடிடுவோமா?”

நீங்க ஓவரா பேசிட்டு இருக்கீங்க.. ஒரு பொண்ணு கிட்ட பேசுற லிமிட் கூடத் தெரியாதா உங்களுக்கு!”

நம்ம விநாயகர் கோயில் முன்னால வச்சு உங்க கழுத்துல தாலி கட்டிடறேன். அப்புறம் தனிக்குடித்தனம் போயிடலாம் நீங்க விருப்பப்பட்டா. வீட்டுக்கு நீங்க தான் எஜமானியம்மா. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க

எதுக்கு?”

ரன்னிங் போகத்தான். சிரிக்கவே மாட்டிங்களா? கிலோ என்ன விலைன்னு கேட்பீங்க போல. நம்ம பேருந்து வந்தாச்சு. நான் இன்னிக்கு வரலை. சொல்லிக்காம போறீங்களே!”

அப்படித்தான் செய்வேன்வந்து நின்ற பேருந்தில் ஏறி, ஒரு பார்வை பாராமல் செல்லும் லிசியை வேதனையோடு பார்த்தபடி நின்றான் கண்ணன்.

அடுத்த நாள். பேருந்து நிறுத்தத்தில் லிசி வருவதற்கும் முன்னதாகவே வந்து நின்று காத்திருந்தான் கண்ணன். லிசி பலத்த யோசனையோடு தான் அன்று வந்தால். தினமும் தொல்லை தரும் கண்ணனோடு நட்பாய் பழகினால் தான் என்ன? யார் இவன்? என்ன வேலையில் இருக்கிறான்? குடும்பம் எப்படி? நிஜமாகவே என்னை விரும்புகிறானா? இல்லை பொழுது போக்கிற்காகவா? கெட்டவன் போலவும் அப்படியொன்றும் தெரியவில்லையே! இப்படி யோசனைகளோடு நிறுத்தம் வந்தாள்.

நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்துட்டேங்க. ஞாயிற்றுக்கிழமை காலை எட்டிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் நல்ல நேரம். இந்த டிவியில எல்லாம் காலையில ராசிபலன் சொல்வாரேஅவர் கிட்டவே கேட்டுட்டேன்

எதுக்கு?”

தாலி கட்டிக்கத்தான்ஹா! கோபமா? சரி உங்க விருப்பப்படி மோதிரம் மாத்திக்கலாங்க லிசி

என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்?”

உங்க டேட் ஆஃப் பர்த்தே தெரியுங்க சொல்லவா?”

இன்னும் என்னென்ன விஷயம் என்னைப்பத்தி துப்பறிஞ்சு கண்டு பிடிச்சிருக்கீங்க?”

பூப்போல மனசு இருக்கி பெண் லிசி. அப்புறம்.. அட உதட்டை சுழிக்காதீங்க லிசி. ஆனா அதுகூட உங்களுக்கு அழகாத்தான் இருக்கு. உயர்வு நவிற்சி அணியில பேசினால் தான் பெண்பிள்ளைகளுக்கு பிடிக்குமே!”

எத்தனை அனுபவமோ!” என்று லிசி சொன்னதும் கண்ணனின் முகம் இருண்டு போனது. எதுவும் பேசாமல் முகத்தை தொங்க வைத்துக் கொண்டான். மேற்கொண்டு அவன் எதுவும் பேசவில்லை.

பேருந்து ஏறுகையில் வழக்கமாக லிசி ஏறும் முன்புற படிக்கட்டுகளில் ஏறாமல் பின்புற படிக்கட்டில் ஏறிக் கொண்டான். பேருந்தினுள் இருபது டிக்கெட்டுகள் நின்றபடி பிரயாணம் செய்து வந்திருந்தன. எப்போதும்போல டிரைவர் இருக்கைக்கு அருகில் சென்று நிற்பவள், ஊனமுற்றோருக்கான இருக்கை அருகில் நின்று பின்புறம் கண்ணனைத் தேடினாள். நெரிசலில் ஒதுங்கச் சொல்லி வழக்கம்போல அவன் முன்புறமாக வரவும் இல்லை. படிக்கட்டின் அருகேயே இவளைப் பார்த்தவாறு தான் நின்றிருந்தான் என்றாலும் முகம் வாட்டத்துடன் இருப்பதை இங்கிருந்தே லிசி உணர்ந்தாள்.

இப்படி தொட்டால் சிணுங்கியாய் இருப்பான் என்று லிசி எதிர்பார்க்கவில்லை அவனை. ‘இவள் அருகில் நின்றிருக்கும் வேறு பெண்களைப் பார்க்கிறானா?’ என்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். இதற்கும் முன்பு கூட அப்படி அவனை இவள் கவனித்திருக்கிறாள் தான். ‘ஆஹா அழகுஎன்றுகூட அவன் மற்ற பெண்களைப் பார்ப்பதில்லை. நடத்துனரிடம் ஸ்டாப்பிங் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நிறுத்தங்களில் கணிசமாய் ஜனங்கள் ஏறவே பேருந்து நிரம்பி வழிந்தது. நடத்துனர் இப்போது பின்னால் கண்ணன் அருகில் தான் கம்பியில் சாய்ந்தபடி நின்று டிக்கெட் கிழித்துக் கொடுத்தபடி இருந்தார். ஏறியதிலிருந்து லிசி அவனைக் கவனித்தபடி தான் இருந்தாள். கண்ணன் டிக்கெட் எடுக்கவேயில்லை. நடத்துனரை அவன் கண்டு கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. மூன்று ரூபாய் டிக்கெட் எடுப்பதில் கூட திருட்டுத்தனமா?

முகத்தை தொங்க வைத்துக் கொண்டானே என்று வருத்தப்பட்டேனே! சே.. பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் என்றானே! நட்போடு பழகலாம் என்று நினைத்தேனே. கர்த்தரே! என்னைக் காத்தீர்கள்!’

இறங்கும் நிறுத்தம் வந்த்தும் லிசி இறங்கி தன் கம்பெனி நோக்கி நடையிட்டாள். ‘கண்ணன் இறங்கினானா.. இல்லை, பேருந்திலேயே செல்கிறானா?’ என்று கூட அவனைக் கவனிக்கவில்லை இவள். இனி அவனைக் கவனித்து என்னவாகப் போகிறது? மூன்று ரூபாய் டிக்கெட் எடுப்பதில் ஏமாற்றத் துணிந்தவன் இன்னும் என்னவென்ன ஏமாற்றுகள் செய்வான்.

நிறுத்தத்தில் இறங்கிய கண்ணன், என்ன வருத்தமிருந்தாலும் பின்னால் வருகிறானா என்று எப்போதும் பார்த்து முறைத்தபடியாவது செல்பவள் ஏனோ இன்று திரும்பிப் பாராமல் செல்கிறாளே என்ற தவிப்பில் அங்கேயே நின்று விட்டான்.

இந்தப் பெண் பின்னால் பித்துப் பிடித்து அலைவது அவளே சொன்னது போல் டைம் வேஸ்ட் தானோ! காலம் போகும் வேகத்தில் காதலுக்காக இப்படித் தவித்து நிறுத்தத்தில் நிற்பது இவனுக்கே வெட்கமாயிருந்தது. பார்க்கும் முகங்களெல்லாம் பணத்தேடலில் அலையும் முகங்களாகவே தான் இருந்தன. உண்மைக்காதலோ, பொய்க்காதலோ இதையெல்லாம் மெனக்கெட்டு செய்து கொண்டு தவிப்பாய் இரவுகளைக் கழிக்க பெண்களும் கால ஓட்டத்தில் தயாரில்லை போலத்தான் உள்ளது.

காதல் என்ற பைத்தியக்குழியில் இனி காலம் முழுவதும் விழவே கூடாது என்ற முடிவில் திரும்பி நடந்தான் கண்ணன்.

முற்றும் போட வேண்டிய இடத்தில் படைப்பாளியாகிய நான் லிசியைப் பார்த்து, ‘மேடம்! கண்ணன் உங்களுக்காகவே பேருந்தில் மாத பாஸ் கார்டு வாங்கித்தான் பயணிக்கிறான்என்று சொல்லலாம். இதற்காக நான் ஈரோட்டிலிருந்து மதுரை வரை பயணிக்க வேண்டும். அப்படிச் சொன்னால், லிசி மன்னிப்பு கேட்கவும் நட்போடு பழகவும் கண்ணனைத் தேடுவாள். கண்ணனோ அடுத்த நாளே வேலை நிமித்தமாக சென்னை சென்று விட்டான். எந்த மூலையில் சென்னையில் அவன் இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது.

குங்குமம், 28.1.13

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *