6 திருமண அழைப்பிதழ்

விஜயமங்கலம் விஷ்ணு அச்சகத்தின் உரிமையாளர் ரவி என் ஊர் தான். ஒரு பீடி சிகரெட் பழக்கமோ, குடிப்பழக்கமோ எதுவும் இல்லாத ஒரே உள்ளூர் ஆள். இன்னமும் இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அடுத்தவர் மனைவியிடம் தொடர்பில் இருந்து பணத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர் மனைவியிடம் செல்வது கெட்ட பழக்கமா? என்பதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ரவி என்னை விட இரண்டு வயது மூத்தவர். அவரிடம் அச்சகப் பணியாளனாக நான் முன்பொரு காலத்தில் பணி செய்து கூலி வாங்கியிருக்கிறேன். சென்னிமலை பள்ளியில் அவர் பத்தாவது படிக்கையில் நான் எட்டாவதில் இருந்தேன். சனிக்கிழமை என்றால் சைக்கிளில் பதிமூன்று கிலோமீட்டர்கள் செல்வோம். அன்று மதியம் பள்ளி விடுமுறை என்பதால் மதிய வெய்யிலில் மாங்கு மாங்கென சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து விடுவோம் மேலும் சில நண்பர்களுடன். ஒரு சனிக்கிழமை நானும் நேசனல் என்ற நண்பரும் பள்ளி செல்லாமல் சினிமாவுக்கு சென்று விட்டோம். மதியம் இன்னொரு சினிமா. அந்த வயதில் கட்டடித்து சினிமாவுக்கு செல்வது ஒரு திரில் தான்.

மாலையில் வீடு வருகையில் இருட்டி விட்டது. தந்தையார் தடியை எடுத்து விட்டார் என்றால் கவனமாகவே என்னை கையாள மாட்டார். அது அன்றும் நடந்தேறிவிட்டது. சினிமாவுக்கு சென்ற விசத்தை யார் போட்டுக் கொடுத்தது? என் தந்தையார் ரகசியங்களை பாதுகாத்து அறியாதவர். ரவி சொன்னாண்டா! அவ்வளவு தான் ஊருக்குள் நேராக ஓடி வந்தேன். ரவியின் வீட்டின் முன் நின்று நல்லவிதமான கெட்ட வார்த்தைகள் உச்சரித்த பின் வெளிவந்த ரவி. உங்கொப்பன் தான் எங்க ரவி அவன்னு கேட்டாப்ல. நான் சினிமாக்கு போயிட்டான்னு சொன்னேன். நீ ஈடு திம்பீன்னு எனக்கென்ன தெரியும்? என்றார்.

நல்ல பழக்கவழக்கங்களோடும், ஒழுக்க சிந்தனைகளையும் ஒருங்கே பெற்ற ரவி இன்று வரை அதை கடைபிடித்தும் வருகிறார். தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று நூற்றுக்கு பத்துப்பேர் வாழ்வதால் தான் ஊரில் மழை பொய்த்துக் கொண்டே இருக்கிறது இன்னும். நல்லவேளை எனக்கு அப்படி பொறுப்பு மிக்க சிந்தனைகள் வழங்கவில்லை யாரும். அப்படி முயற்சி செய்த டாடியும் தோற்றுப்போய் விட்டார். நான் கடைசியாக எழுத்துக்கு வந்து விட்டேன். மனது தறிகெட்டு ஓடும் சமயமெல்லாம் எழுத அமர்ந்து விடுகிறேன்.

தான் பிழைப்புத்தனம் செய்யும் ஊரிலேயே நிலம் வாங்கி வீடு கட்டி சிறந்த குடும்பஸ்தனாக ரவி ஆகி விட்டார். நான் அப்படியே இருக்கிறேன். அவர் பார்வையில் எப்படி இவனால் துளிகூட மாற்றமில்லாமல் அப்படியே இருக்க முடிகிறது என்ற கேள்வி இருக்க வாய்ப்பிருக்கிறது. அவரவர்களுக்கான வாழ்க்கையை அவரவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் கூட வாழ்ந்து பார்த்துவிட்டுத் தான் அதைச் செய்து கொள்கிறார்கள். இப்போது சொல்லப்போகும் விசயம் 89-ல் கோவை நரசிம்மநாய்க்கன்பாளைய அச்சகத்தில் நடந்தது. அதே மீண்டும் தன் அச்சகத்திலும் நடந்ததாக சமீபத்தில் ரவி சொன்னார்.

விஜயமங்கலம் விஷ்ணு அச்சகத்தில் சின்னச்சாமி நுழைந்தபோது மணி காலை ஒன்பதரை இருக்கும். தனது மிதியடிகளை அச்சகத்தின் வாசல்படியில் விட்டு விட்டு பின்மண்டையை சொறிந்தபடி புன்னகையோடு நுழைந்தான்.

சின்னச்சாமிக்கு கல்யாணம் நிச்சயமான நாளில் இருந்தே யாரைப் பார்த்தாலும் புன்சிரிப்போடு தான் முகத்தை வைத்துக் கொள்கிறான். “என்னடா சின்னா புன்னகை?” என்று தெரிந்தவர்கள் யாராவது கேட்டுவிட்டால் அவ்வளவு தான். அப்படி பாடுபட்டேனுங்க, இப்படி ஓயாமப் பாடுபடறேனுங்க.. என்னத்தக் கண்டேனுங்க? என்று நீட்டிக் கொண்டே வந்து கடைசியில் தான் கல்யாணங் கட்டிக்கலாமுன்னு இருக்கேனுங்க, என்பான். கேட்ட மனிதரோ, “அட பெப்பலத்தானே இதை மொதல்லயே சொல்றதுக்கென்ன?” என்று சொல்லிச் செல்வார்.

சின்னச்சாமி அச்சகத்தினுள் பைண்டிங் செக்சனில் நின்றிருந்த மூவரையும் அடையாளம் தெரியாமல் பார்த்தான். அச்சக உரிமையாளர் ரவி அப்போது தான் வந்து ஊதுபத்தி பற்ற வைத்து சாமி படங்களுக்கு காட்டிக் கொண்டிருந்தார். இவனை பார்த்தவர், “என்றாது காத்தால இந்தப்பக்கமா வந்திருக்கே?” என்று கேட்டபடி தொழிலாளர்களிடம் அன்றைய வேலை நிலைமைகளை பற்றி பேசிவிட்டு வந்தமர்ந்தார் தன் இருக்கையில்.

பாரதி ஸ்கூல் வவுச்சர் பேடு முப்பது டெலிவரி குடுத்தாச்சா? கோழிப்பண்ணை பில் புக் பைண்டிங் ஆயிடுச்சா? பைப் கம்பெனி பில் புக் பர்ப்பரைட்டிங் போட்டாச்சா?” என்று அமர்ந்து கேட்டபடி இருக்க, “ஆச்சுங்கஎன்றொரு குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது.

இப்படி சேர்ல உக்காரு சின்னு. என்ன விசயமா வந்தே?” என்றார்.

எனக்கு கலியாணம் வருதுங்கொ

பார்றா அதிசயத்தை! அடே கேட்டீங்களா? உனக்கு எந்த .வா டா பொண்ணு குடுத்தது?”

எம்பட மாமன் பிள்ள தானுங்க, ஈரோட்டுல கருங்கல் பாளையத்துல சாயப்பட்டறை வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருக்காளுங்க

அது சரி சாயப்பட்டறை வேல தெரிஞ்ச பொண்ணை இங்க கட்டீட்டு வந்து என்னடா பண்றது? நம்மூர்ல ஏதுடா பட்டறை? வந்தா இனி தறிப்பட்டறைக்குத் தான் நூலுப் போட தாட்டி உடோணும். பேசாம உங்கொம்மாவையும் கூட்டிட்டு ஈரோடு பொண்டாட்டி ஊருக்கே போயிடு. சரி எப்போ கல்யாணம்?”

கல்யாணத்துக்கு இன்னம் பத்தே பத்து நாளு தானுங்க இருக்குது. இதென்னங்க இவத்திக்கி ஈஸ்வரங் கோயில்ல தான் கல்யாணம். இப்பத்தான் ஐயரை பார்த்து பேசிட்டு வர்றனுங்க. அப்பிடியே கையோட பத்திரிக்கை அடிக்கவும் சொல்லிடலாமுன்னு தான் நம்மளை பாக்க வந்தனுங்க

பத்திரிக்கை அடிச்சுக் குடுக்குறதுக்கு தாண்டா நான் உக்கோந்துட்டு இருக்கேன். அடிச்சுட்டா போவுது. எத்தனை அடிக்கோணும்? சமாச்சாரம் எப்படி?”

ஏனுங்கோ, எனக்குத் தெரிஞ்சு பதனஞ்சு வருசமா இந்தப்பக்கத்துல எல்லாரு கல்யாணத்துக்கும் போயி மொய்ப்பணம் வச்சிருக்கனுங்க. எப்படியும் முன்னூறு பத்திரிக்கையாச்சும் அடிக்கோணுமுங்க. பொண்ணு ஊட்டுக்கு பத்திரிக்கை வேண்டாமுன்னு எம்பட மாமன் சொல்லிப் போடுச்சுங்க. அவங்க வெத்தலபாக்கு வச்சு சொல்லிக்கறாங்களாம். நாம அப்படி பண்ணா நல்லாவா இருக்கும். என்ன நாஞ் சொல்றதுங்க? அதான் ஒரே முடுவா வந்துட்டனுங்க

சரி கல்யாணம் பத்து நாள்ங்கறே அடுத்தவாரம் விசாழன் வருது. முகூர்த்த நேரமெல்லாம் பஞ்சாங்கத்துல பாத்து போட்டுக்கறேன். உன்னோட அம்மா பேரு, சம்சாரம், அவ அப்பா அம்மா பேரு மட்டும் சொல்லு

எல்லாருக்கும் அடிக்கிற மாதிரி எனக்கு வேண்டாமுங்க. நாஞ் சொல்றதை அப்படியே எழுதி நோட்டீஸ் அடிக்கிற மாதிரி மஞ்சக்காயிதத்துல அச்சு போட்டுக் குடுத்தீங்கன்னா போதும். அப்பிடியே ஊடூடா போயி குடுத்துடுவேன்.”

அட கேனையா! பத்திரிக்கையின்னா முன்னால அம்மன் படம், விநாயகர் படம்னு போட்ட கார்டுல தான் அடிச்சுக் கொண்டி கொடுக்கோணும். நோட்டீஸ் அடிக்கக் கூடாது. நீ என்ன கும்பாபிஷேகமா பண்றே? அதைக்கொண்டி நாலு பேர்த்துகிட்ட நீட்டினா சிரிப்பாங்கடா. அறிவு கெட்டவன்ங்கறது செரியாத்தான் இருக்குது. கவர்ல போட்டு ஜம்முன்னு கொண்டி குடு. எத்தனை ஆயிடப்போவுது? உனக்கு வேணா எம்மபட கூலி வேண்டாம். பேப்பர் செலவு, இங்க் செலவு, கரண்டு செலவு மட்டும் வாங்கிக்கறேன்

நாஞ் சொல்றதும் பத்திரிக்கை தானுங்க. அதே வழுவழு காகிதத்துல அடிச்சி கவர்ல போட்டுக் குடுங்க. இன்னதுன்னு நாஞ் சொல்றதை மொதல்ல எழுதிக்குங்க. அதை அப்பிடியே அடிச்சுக் குடுங்க

சரி சொல்லுஎன்ற ரவி பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டார். மேலே பிள்ளையார் சுழி போட்டார்.

உனக்கு குல தெய்வம் எதுடா?”

அண்ணமார் சாமிங்கோ

சேரி அண்ணமார் சாமி துணை. இனிச் சொல்லு

எல்லாருக்கும் வணக்கமுங்க! நான் தான் சின்னச்சாமியின்னு பத்திரிக்கை குடுக்குறப்பவே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு,முங்களே! பாத்தீங்கனாக்க அங்க இங்கன்னு கெடைக்கிற வேலை எல்லாம் செஸ்சு போட்டு தினக்கூலி, வாரக்கூலின்னு வாங்கீட்டு, அப்படி வேலை இல்லீன்னா சினிமா கினிமா பார்த்துட்டு இருந்தே வயசு பாருங்க முப்பது ஆயிப்போச்சுங்க பொசுக்குன்னு

ஏண்டா உனக்கு முப்பதா? முக்கா கிழவன் ஆனமாதிரி இருந்துட்டு ஏமாத்துறியாடா?”

இடையில பேச்சு குடுக்காதீங்க, அப்புறம் கோர்வை விட்டுப்போயிடும். கடைசில பேசிக்கலாம்.”

சரி சரி வெசையா சொல்லாதடா நெதானமா சொல்லு. எனக்கென்ன ஏழு கையா இருக்குது?”

ஊட்டுல நானும் எங்காயாளும் தானுங்க. அவளுக்கு வேற இந்த ஆஸ்துமான்னு நோவுங்க. அடுப்புப் பொகையெல்லாம் ஆவாதுன்னு கவருமெண்டு ஆஸ்பத்திரியில சொல்லிப் போட்டாங்க. இதென்றா வம்பாப் போச்சுன்னு ரோசனைங்க! நமக்கு சமையல்கட்டுல ஒரு வாப்பாடும் தெரியாதுங்களா.. சோத்துக்கு பின்ன சிங்கி அடிக்கறதான்னு ஒரே ரோசனை பார்த்துக்கங்களேன். ஒரே முடிவா மோட்டாரு ஏறி கருங்கல்பாளையம் போயி எம்பட மாமங்கிட்ட இப்பிடின்னு விசயத்தை சொல்லிப் போட்டனுங்க.

அதுக்கேன் மாப்ள இடி தலையில உழுந்த மாதிரி சோவமா சொல்றீங்க? எம்பட பெரிய புள்ள சிந்தாமணிய கட்டிக் கொண்டி வெச்சு மவராசனா பொழைங்கன்னு சொன்னவரு என் மாமியாகாரிகிட்ட என்னம்மிணி சொல்றேங்காட்டி, அதும் வாயெல்லாம் பல்லா இதாச்சிம் தெகைஞ்சுதேன்னு காபி குடுத்துச்சு.

சரியின்னு போட்டு மாரியம்மன் கோயில்ல பூக் கேட்டோம். மாரியாத்தா நெனச்ச மாதிரியே செவப்பு பூ குடுத்தங்காட்டி சந்தோசமாப் போச்சு. அததுக்குன்னு நேரங்காலம் வந்தா தன்னப்போல நடக்குது பாருங்க. மேக்கொண்டு சொந்தத்துல பெருசுங்க கூடி நிச்சயம் பண்டி விசயமங்கலம் ஈஸ்வரங்கோயில்ல வியாழக்கிழமெ காத்தால சிந்தாமணிக்கு தாலி கட்டி எம் பொஞ்சாதியா ஏத்துக்கறனுங்க. அந்த விழாவுக்கு உங்க எல்லோரையும் எம்பட ஒரம்பறை சனத்தையும் அன்போட கூப்புடறேன். வந்திருந்து சீரும் சிறப்புமா கடன் வாங்கிப் பிழைக்காம நல்லபடியா வாழ்க்கை நடத்துங்கன்னு வாழ்த்துங்க! அவ்வளவு தானுங்க

நீ சொன்ன மாதிரி அடிச்சுத் தந்துடறேன். என்னோட பிரஸ் பேரை போடலைடா சாமி. எவன் அடிச்சான்னு உன்னை கேட்டா ஈரோட்டுல அடிச்சேன்னு சொல்லிடுடா. முன்னூறு ரூவா வரும். கையில எவ்ளோ வச்சிருக்கே?”

இரநூத்தம்பது ரூவா இருக்குது இதை புடிங்க! நான் போயிட்டு பொழுதோட வர்றனுங்க. இன்னிக்கி குடுத்துடுவீங்கள்ல!”

ஏண்டா இதென்ன மளிகை கடையா? கேட்டதும் பொட்டணம் கட்டித் தர்றதுக்கு? போயிட்டு நாளைக்கு பன்னண்டு மணிக்காட்ட வா. அடிச்சு வச்சிருக்கோம்என்றவர் பணத்தை கல்லாவில் போட்டு பூட்டி விட்டு எழவும் இவனும் எழுந்து அச்சாபீசை விட்டு வெளியேறினான். சாலையில் சென்ற ஈஸ்வரங்கோவில் ஐயரைப் பார்த்து சல்யூட் ஒன்று போட்டு விட்டு நகர்ந்தான். அவர் சிரித்தபடி தலையை ஆட்டிக்கொண்டு சென்றார். சின்னச்சாமி தார்சாலையில் மூங்கில்பாளையம் நோக்கி நடந்தான்.

காலையில் முத்தானும், ராசுவும் மூங்கில்பாளையம் ராமசாமி தோட்டத்தில் சாலை போடும் வேலை இருப்பதாகவும் நீயும் வர்றியா? என்றும் கேட்டிருந்தார்கள். இவனும் எப்படியும் வந்து விடுவதாக சொல்லியிருந்தான். இன்னம் ஆளைக் காணோமே என்று இவனைத் திட்டிக் கொண்டு தான் வேலையை துவங்கியிருந்தார்கள் தோட்டத்தில்.

போக வர இவனுக்கு இருந்த சைக்கிளை டியூப் மாற்றி ஓவராயல் செய்து தரும்படி நேற்றுத்தான் மேக்கூர் சைக்கிள் கடையில் விட்டிருந்தான். பிறகு லொடக்லெஸ் சைக்கிளாகவே அது சம்சாரம் வந்த பிறகும் இருந்தால் நன்றாகவா இருக்கும்? அது பின்னால் கேரியர் இல்லாத மொட்டை வண்டி. இனி சம்சாரம் வந்து விட்டால் முன்னால் அமரவைத்தா டபுள்ஸ் ஓட்டுவது? பின்னால் கேரியர் ஒன்று புதிதாக மாட்டச் சொல்லி விட்டான். மேலும் ஆட்களை சாலையில் ஒதுங்கச் செய்ய அழுத்துனால் பேப்பேப் என்று கத்தும்படியும் ஒன்று வைக்கச் சொல்லி விட்டான்.

நிச்சயம் ஆன நாளிலிருந்து சிந்தாமணியோடு முதல் ஆட்டம் சினிமா பார்க்க பெருந்துறை போவது போல் இரண்டு கனாக்கண்டு விழித்தெழுந்து நடுச் சாமத்தில் சிரித்தான். முன்பாக தாசம்பாளையம் வடிவேலுவோடு சிப்காட்டில் கட்டிட வேலைக்கு சென்ற போது கலவை போடவும், காரைச்சட்டி தூக்கவும் வந்த புவனா தான் சின்னச்சாமி மீது ஒரு கண் வைத்திருந்தாள். எப்ப சின்னு என்னை கட்டிக்கப் போறே? உனக்காக நான் ஏங்கி ஏங்கி துரும்பா இளைச்சிப் போறேனே தெரியிலியா? என்று சாடை பேசுவாள். அவளுக்கு வாய் எந்த நேரமும் அசை போட்டுக் கொண்டே தான் இருக்கும். வெத்தலை பாக்கு புகையிலை இல்லாமல் இருக்க மாட்டாள் புவனா. அதனால் அவள் பற்களெல்லாம் கறை தான். அது தான் இவனுக்கு பிடிக்காது.

சின்னச்சாமி காரைப்பூச்சில் நின்றிருந்தால் வேண்டுமென்றே இவனை இடித்து விட்டு குலுங்கிப் போவாள். “ராஸ்கோல்என்று இவன் சப்தம் போடுவது புவனாவுக்கு புடிக்கும். நடந்து கொண்டிருந்த நாடகத்தை வடிவேலு தாமதமாகத் தான் தெரிந்து கொண்டான். தெரிந்தபின் புவனாவிடம் அவன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் சின்னச்சாமியிடம் பேசினான்.

புவனாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதென்றும், பொள்ளாச்சிக்கு கட்டிக் கொடுத்து மூன்று மாதத்தில் பிழைக்காமல் ஓடி வந்து ஊரில் இருக்கிறாள் என்றும் சொன்னான். அன்றிலிருந்து புவனாவை பார்க்கையில் இவனுக்கு பாவம் மட்டுமே தோன்றியது. அப்போது புவனாவோடு டபுள்ஸ் சினிமாவுக்கு போவது போல் கனவொன்று வந்தது. பத்திரிக்கை ஒன்று அவளுக்குப் போய் கொடுக்க வேண்டும். என்னை ஏமாத்திப் போட்டீல்ல! என்று சொன்னாலும் சொல்வாள்.

ராமசாமி தோட்டத்தில் முத்தானும், ராசுவும் கையில் நீளமான மூங்கிலை தூக்கிக் கொண்டு போய் பறித்திருந்த குழியில் நட்டுக் கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும், “எங்கே வராமப் போயிடுவியோன்னு பேசிட்டு இருந்தோம். உனக்கு நூறு ஆயுசு, அந்தக் கடப்பாறையை எடுத்து குழிக்குள்ள கருங்கல்லு போட்டு நங்கு நங்குன்னு நாலு ஊனு ஊனு. டெம்பரா மூங்கில் நேரா நிக்கோணும் பாத்துக்கஎன்றான் முத்தான். சின்னச்சாமி சட்டையை கழற்றி முருங்கை மரத்தின் வாதில் போட்டு விட்டு கடப்பாறையை கையில் எடுத்துக் கொண்டான். தோட்டத்தில் அவர்களுக்கு பொழுது இறங்கும் வரை வேலை இருந்தது. இன்னும் இரண்டு நாளைக்கு அங்கேயே வேலை இருக்கும் போலிருந்தது. தட்டுப்போர் போடும் வேலையும் இருப்பதாக ராமசாமி அவர்களிடம் சொன்னார்.

இருட்டு கட்டிய சமயம் மேக்கூரில் தன் வீடு வந்தவன் உடம்பு அசதி போக சுடுதண்ணி வைத்துக் குளித்தான். தனக்கும் ஆயாளுக்கும் தோசை வாங்கி வர கிளம்பினான். ஆயாள் பத்து நாளாக அடுப்பு பற்ற வைப்பதில்லை என்பதால் இருவருக்குமே ஓட்டல் தீனி தான். ஆயாள் மாத்திரை விழுங்காமல் குப்பையில் வீசி விடுமென்பதால் இவனே இரண்டு வேளையிலும் ஆயாள் சாப்பிட்டு முடித்த பின் மாத்திரையை விழுங்க வைத்து விடுவான்.

அடுத்த நாள் வேலைக்காட்டிலிருந்து முத்தானுடைய சைக்கிளை வாங்கிக் கொண்டு அச்சகம் வந்தான் சின்னச்சாமி. அச்சகத்தில் ரவி இல்லை. வேலையாள் ஒருவன் தான், இவன் பத்திரிக்கை கம்ப்யூட்டரில் அச்சுக்கோர்த்துக் கொண்டிருப்பதாயும், அதைப்பார்த்து தப்பு ரைச் திருத்தி பாலிமர் சீட் எடுத்தால் சரி உனக்கு சாய்ந்திரம் பத்திரிக்கை ரெடி! என்று கூறி தாட்டி அனுப்பினான். இவனும் மாலையில் வேலைக்காட்டிலிருந்து வீடு செல்கையில் வாங்கிக் கொள்வதாய் கூறி விட்டு வேலைக்காட்டுக்கே வந்து விட்டான்.

என்ன சின்னு, ராக்கெட் மாதிரி போனே? போன சுடிக்கு வந்துட்டே? பத்திரிக்கை பொட்டணத்தை காணமே!” என்று ராசு கேட்க, “பொழுதோட தான் ரெடி ஆவுமாம்என்றான்.

சாயந்திரம் ஏழு மணியைப்போல இவன் பத்திரிக்கை வாங்கிப் போகும் கனவோடு அச்சகம் போனபோது அது மின்சாரம் இல்லாமல் இருளில் கிடந்தது. சார்ஜர் லைட் விளக்கொளியில் ரவி சேரில் அமர்ந்திருந்தார். இவனைக் கண்டதும், “உன்னோட பத்திரிக்கையை அடிக்கவே முடியலடா சின்னா! மத்தியானம் மூனு மணிக்கு போன கரண்ட்டு இன்னம் காணம். இந்தப் பொழப்பே கரண்ட்டை நம்பித்தான் ஓடுது. இப்படி நிறுத்தீட்டாங்கன்னா சாத்தீட்டு போக வேண்டியது தான். பாரு மஞ்சள் பேப்பரு உனக்காவத்தான் வெட்டி மத்தியானமே ரெடியா வெச்சிருக்கேன். நைட்டு வேலை இன்னிக்கி செய்யுறோம் சின்னு, நாளைக்கு காலையில வாங்கிக்க. நைட்டு வாங்கீட்டு போயி மஞ்சள் தடவி எப்படியும் காத்தால தான குடுப்பே? காத்தால கோயல்ல கொண்டி வச்சு பூசை ஒன்னை போட்டு எடுத்துட்டு போயிடுஎன்று ரவி சொல்ல செரீங்க, என்று சொல்லி விட்டு வெளியேறினான். கரண்டு இல்லாமப் போனதுக்கு அவுங்க தான் என்ன பண்டுவாங்க!

இரவு படுக்கையில் விழுந்ததும் கல்யாணத்துக்கு இன்னும் ஒன்பது நாள் தான் என்ற யோசனை ஓடியது. சிந்தாமணியை நினைத்துக் கொண்டான். சிந்தாமணி தொட்டதற்கெல்லாம் தன்னிடம் சண்டைக்கட்டாத பிள்ளையாய் இருக்க வேணும் பிள்ளையாரப்பா! என்று வேண்டிக் கொண்டான். அவளை காலம் முழுதும் ஒத்தை அடி போடாமல் குடும்பம் நடத்த வேண்டும் முருகா என்று வேண்டினான். இப்படி நிறைய வேண்டுதல்களை வைத்து விட்டு தூங்கிப் போனான்.

காலையில் ஆயாள் இட்லி தின்று முடித்த தட்டை கழுவலாம் என்று எடுத்துப் போய் கழுவிக் கொண்டிருந்த சமயம் இவன் ஈரோட்டு மாமன் அறக்கப் பறக்க வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்தார். “வாங்க மாமா, அம்மா இப்பத்தான் சாப்டுச்சா, அதான் கழுவி வைக்கிலாம்னுஎன்று இவன் சொன்னதை காதில் வாங்காமல் போய் திண்ணையில் அமர்ந்தார். இப்படி ஆயிடிச்சு என்று விசயத்தை சொன்னார். சின்னச்சாமிக்கு வாழ்க்கையில் முதலாக தலை சுற்றல் வரவே தலையைப் பிடித்துக் கொண்டு வாசலில் அமர்ந்தான்.

தகவலை உங்ககிட்ட சொல்லீட்டு போகலாம்னு தான் காத்தால நேரத்துல வந்தேனுங்க மாப்ள! ஆளுங்களை அனுப்பீருக்கேன். மத்தியானம் போல ஈரோடு வாங்க மாப்பிள்ளை! மேக்கொண்டு அங்க பேசிக்கலாம்என்றவர் எழுந்து வந்த விசையில் கிளம்பிப் போனார். இவனும் எழுந்து வாசலில் காறித்துப்பி விட்டு செருப்பைத் தொட்டுக் கொண்டு கிளம்பினான்.

சின்னச்சாமி நேராக அச்சகத்திற்குத் தான் வந்தான். ரவி இவனைப் பார்த்ததும், “இதென்ன உம்மட பத்திரிக்கை காஞ்சுட்டு இருக்குது பாரு. டேய் பொடியா.. தட்டி எடுத்து பண்டல் போட்டு கட்டுஎன்றார்.

அதை கொண்டுட்டு போயி நானு யாருக்குங்க குடுக்கறது? பொண்ணுப்புள்ள நேத்து நைட்டே ஓடிப் போச்சுங்களாமா!” என்று சொல்லிவிட்டு இறங்கி சாலையில் நடந்தான்.

இப்போதும் நீங்கள் விஜயமங்கலம் பக்கமாக வந்தால் மூன்று டாஸ்மார்க் பார்களில் எந்தக் கடை வாசலிலும் சின்னச்சாமியை பார்க்கலாம். நீங்களாவே சென்றுநீயா சின்னச்சாமி?” என்று கேட்க வேண்டியதே இல்லை. அவனாகவே உங்களைக் கண்டால் வருவான். ஒரு பத்து ரூபா இருந்தா குடுங்க சார்! என்று கேட்டபடி.

எப்போதோ போதையில் இரண்டு முறை கொடுத்துப் பழக்கிவிட்டு நான் இன்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறேன் அவன் கும்பிடுக்காக. எந்த இடத்தில் கண்டாலும் கும்பிடு போட்டு விட்டு சில்லரை இருக்குதுங்ளா? என்பான். சின்னச்சாமிக்கு திருமணம் நடக்கவேயில்லை. தாடிகூட நரைத்து விட்டது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் டாள்மார்க் கடைப்பக்கமாக சின்னச்சாமிகள் சுற்றிவந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தோலைமே 2012

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *