5 மல்லிகா என்றொரு ஆவி

சமீபத்தில் என் நண்பர் சத்தியமங்கலத்திலிருந்து அலைபேசியில் அழைத்தார். வீட்டுல தான இருக்கீங்க? என்றார். அடியேன் எப்போதும் வீட்டில் தானே இருக்கிறேன். அவர் இரண்டு உருண்டை வடிவிலான அழகான வொய்ன் பாட்டில்களை கொண்டு வந்திருந்தார் மாலையில். இந்த மாதிரியான அழகான பாட்டில்களை அவர்கள் வீட்டில் கடலை, தேங்காய் எண்ணெய் ஊற்றி வைக்க பயன்படுத்துகிறார்களாம். கர்னாடக எல்லைக்கடையில் வாங்கியதென்றும் அங்கு தமிழில் போய் கேட்டால் ஒரு ஃபுல் 150 ரூபாயாம். கன்னடத்தில் ஸ்பீச் கொடுத்துக் கேட்டால் 100 தானாம். இதனால தா அவனுகளை மிதிக்கலாம்னே தோணுது! என்றார். இங்கே தமிழ்நாட்டில் வொய்ன் கோட்டர் பாட்டிலே 100 ரூபாய் வருகிறது. எனக்கு இவனுகளை மிதிக்கலாம் என்றிருக்கிறது!

மேற்கொண்டு இந்தக் காரியத்தை செய்யாதீர் நண்பரே! நம் அரசாங்கம் நமக்காக மதுபானக் கடைகள் திறந்து வைத்திருக்கிறது தினமும் பத்து மணிநேரம் நம்மை நம்பி. பத்து ரூபாய் முன்ன பின்ன இருந்தாலும் நம்ம சரக்கே நமக்கு போதுமானது.” என்றேன். சரிதான், என்றார். கேரளாவில் பியர் பாட்டிலின் விலை 50 ரூபாய். இந்தியாவில் நல்ல குடிகாரர்களை பெற்றிருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. குடி தான் தங்களை வழி நடத்துகிறது என்று நம்பி டாஸ்மார்க் படியேறுகிறார்கள்.

முன்பு அடிக்கடி கண்ணில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்த பல பறவையினங்களை இப்போது பார்க்கவே முடிவதில்லை என்று என் ஊருக்கு வந்திருந்த நண்பர் அரை போதையில் வருத்தப்பட்டார். நேரமோ மாலை ஆறு மணியை தாண்டியிருந்தது. ஏன் திடீரென பறவைகள் ஞாபகம் வந்தது இவருக்கு? என்று குழம்பிய நான் பக்கத்தில் சற்று தள்ளி இருந்த கருவேல மரத்திலிருந்து கீச் கீச் ஒலிகள் வந்ததால் கண்களை உயர்த்திப் பார்த்தேன். சிட்டுக்குருவிகள் நான்கு மரக்கிளையில் அமர்வதும் பறப்பதுமாக அமளி பண்ணிக் கொண்டிருந்தது. “உங்க செல்போன்ல பறவைகள் ஒலியை ரிங்டோனா வச்சிருக்கீங்க தலைவரே லைக் இட்என்றார்.

சிகரெட் புகையை வானத்திற்கே அனுப்பி விடுவது போல முகம் உயர்த்தி ஊதியவர், நானும் ரிங் டோனா வச்சுக்கறேன் ப்ளூ டூத் ஆன் பண்ணிக்கட்டுமா? எனக்கு அனுப்பி விடுங்க! என்றார். அவருக்கு மரம் நோக்கி கை காட்டினேன். நகர்ப்புறத்திலிருந்து பயணப்பட்டு வந்திருந்த நண்பர் கருவேல மரத்தை உற்றுப்பார்த்தார். நான்கு சிட்டுகளும் பர்ர்ர் பர்ர்ர் என பறப்பதும் கிளைகளில் கீச் கீச்சென அமர்வதுமாக இருப்பதை பார்த்தவர்இது சிட்டுக்குருவிங்களா? புத்தகத்துலயும், சேனல்கள்ளயும் பாத்திருக்கேன். இந்தக் குருவிகளை தான் கொன்னு லேகியம் தயாரிச்சு சாப்பிட்டு டெம்பர் பண்ணிக்கறாங்க. உங்க ஊர்ல செல்போன் டவர்கள் இத்தனை நிற்குதுங்களே இதுகள் எப்படி பிழைச்சு கிடக்குதுகள்? என்றார் நண்பர்.

எப்படின்னா? நானே சிட்டுக்குருவிகள் எங்க வாய்ப்பாடில கிடையாதுன்னு மூனு வருசமா நினைச்சுட்டு இருந்தனுங்க. இப்போ அதை உத்து உத்து பாத்துக்கறேன். அதுகள் ஏதோ சொல்லுதுக நம்ம கிட்ட! இடத்தை காலி பண்ணிட்டு போங்கடா, நாங்க தூங்கணுமுன்னு!”

நாம நடந்து போயிட்டே இருக்கம்னு வச்சுக்கங்க, பின்னாடி திடீருன்னு ஒரு லாரியோ, பஸ்சோ பேஏம்னு ஹாரன் குடுத்தா திடுக்குன்னு பயத்துல தடுமாறி நிக்கிறோம். நம்ம இதயத்துல திடுக்கு திடுக்குன்னு அடிச்சுக்குது! நம்ம இதயமே அப்படி துடிச்சுதுன்னா சிட்டுக்குருவி சைஸ் பாருங்க. ஒரு லாரி சத்தத்துக்கு சிட்டுக்குருவி என்னத்துக்கு ஆகும்? செல்போன் டவருகளால தான் ஒரு இனம் காலியாகுதுன்னு நம்ப முடியாதுங்க. சரி கழுகு, பெறாந்து உங்க ஊர்ல கண்ணுக்கு பாக்க முடியுதுங்ளா? கோழிக்குஞ்சு தூக்க வருமே?”

கழுகு எப்பாச்சிம் வருசத்துல ரெண்டு வாட்டி பாத்துடறேன். இப்ப இல்ல. நானே சேனல்ல தான் பாக்குறேன். கூட்டமா உக்காந்து செத்த ஒடம்பை திங்குறதை. பெருமாள்னு ஒன்னு கழுத்துல வெள்ளையாவும் ஒடம்பு செவப்பாவும் இருக்கும். அதை சுத்தமாவே காணம். பேய்கள் வேணா வெள்ளையா சினிமா படத்துல காட்டுற மாதிரி அப்பப்ப வருதுக இப்பஎன்றதும் நண்பர் பாட்டிலில் இன்னம் சரக்கு இருப்பதை திரு திருவென பார்த்தார். பேய்கள் பற்றியான பேச்சுக்கு அவர் வரவில்லை. பி.டி. சாமி என்றொரு எழுத்தாளர் முன்பு பேய்கள் பற்றியான கதைகள் எழுதி பீதியுறச் செய்து கொண்டிருந்தார். அவரது புத்தகங்களை பிடிஎப் வடிவில் கூட எந்த வோர்டு ப்ரஸ்காரர்களும் வைத்திருக்கவில்லை இப்போது. அவரை தமிழ்நாடு மறந்து விட்டது.

எங்கள் ஊரைவிட்டு நான்கு கிலோ மீட்டர் கிழக்கில் பனியம்பள்ளி என்கிற கிராமம் உள்ளது. அங்கு சமீபத்தில் நடந்த பேய்க்கதை சுவாரஸ்யமானது. தவிர பேய்கள் என்றுமே சுவாரஸ்யம் மிக்கவை தான்.

கரை விட்டு இப்படி ஒதுக்குப்புறமாக கிராமம் நோக்கி அமைதியான சூழலுக்கு வருவது எழுத்தாளர் ஏகாம்பரத்திற்கு புதிதான விசயமல்ல. ஏகாம்பரத்தின் மனைவி பள்ளி ஆசிரியை என்பதால் எந்த ஊருக்கு மாற்றல் வந்தாலும் சாமான் செட்டுகளை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். அப்படித்தான் பனியம்பள்ளி வந்து சேர்ந்தார்கள் இருவரும். ஆசிரியையின் வயிற்றில் பிள்ளைப்பூச்சி என்று பதினைந்து வருட தாம்பத்தியத்தில் எதுவும் உதிக்கவில்லை.

ஊருக்குள் வாடகைக்கு என்று இவர்களுக்கு ஒரு வீடும் காலியாய் இல்லை. விசாரித்து பார்த்ததில் சற்று கிழக்கே ஒரு வீடு காலியாய் இருப்பதை ஊரார் சொல்லவும் அந்த வீட்டின் உரிமையாளரை தேடி சென்னிமலை வந்தார் ஏகாம்பரம். குறுநகரில் ஆடம்பரமான விட்டில் தங்கியிருந்த அவரிடம் சென்று பேசுகையில் வீட்டு வாடகை என்று அவர் ஐநூறு ரூபாய் மட்டுமே கேட்டார். ஏகாம்பரத்திற்கோ அதிர்ச்சியாக இருந்தது. வீட்டை இவர் வெளியில் நின்று பார்க்கையில் எப்படியும் இரண்டாயிரம் கேட்பார் என்று நினைத்திருந்தார். இருந்தும் சந்தேகமாய் இன்னொரு முறை கேட்டார். இவருக்கு காது மந்தமோ என்று நினைத்த அவர் 500 என்று சப்தமாக சொன்னார். அட்வான்ஸ் தொகை என்று 1000 மட்டுமே வாங்கிக் கொண்டார்.

அந்த புதுவீட்டில் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்குமோ என்று ஏகாம்பரம் அட்வான்ஸ் தொகை கொடுத்த பிறகு கவலைப்பட்டார். இவரது முகத்தைப் பார்த்து யூகித்துக் கொண்ட வீட்டுக்காரர் இவரின் கவலையை போக்கும் விதமாய் பேசி அனுப்பி வைத்தார்.

பயப்படாதிங்க.. வாஸ்துபடி பக்காவா கட்டினது தான் அந்த வீடு. என் முதல் பையனுக்காக கட்டின வீடு. அவன் ஜோசியத்தை நம்புறவன். ஒவ்வொரு செங்கல்லா பார்த்துப் பார்த்து கூடவே நின்னு தான் முடிச்சான். ரெண்டு வருசம் ஆச்சு. கட்டின ராசியோ என்னமோ வேலை கிடைச்சு வெளிநாடு போயிட்டான். பத்து நாள் தான் அந்த வீட்டுல தங்கினான். உள்ளூர்ல கோவில் திருவிழான்னா நாங்க போய் நாலு நாள் தங்குவோம். சிப்காட்டுல வேலை செய்யுற பசங்க வந்து கேட்டாங்க. தர முடியாதுன்னு சொல்லிட்டேன். உங்களை மாதிரி குடும்பம் ஒன்னு மூனு மாசம் அந்த வீட்டுல தங்கி இருந்துச்சு. இப்ப நீங்க வந்திருக்கீங்க. தண்ணி வசதிக்கு கிணறு ஒன்னு இருக்குது. என்ன சிரமம்னா பஸ் ஏற அரை கிலோமீட்டர் நடந்து வரணும். வாகனம் இருந்தா பிரச்சனை இல்ல. பக்கத்துல தள்ளித்தள்ளி வீடுக நாலு இருக்குது. நீங்கவேற எழுத்தாளர்னு சொல்றீங்க. உங்களுக்கு அமைதியான சூழல் தான வேணும் எழுத!”

ஏகாம்பரத்தின் மனைவிக்கு வீடு ரொம்பவும் பிடித்து விட்டது. தனி சமையல் அறை, தனி பெட் ரூம், தனி பூஜை அறை, ஹால் என்று வீடு விஸ்தாரமாக இருந்ததால் அரண்மனைக்குள் இருப்பது போல் சந்தோசத்தில் இருந்தாள். வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றில் உள்ள நீரின் சுவை தேனாக இருந்தது. நேராக ஒரு லிட்டர் கேன்களை புதிதாக கொண்டு வந்து நீரை நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்து விடலாம். அது சேந்து கிணறு. பக்கெட்டையோ, குடத்தையோ கயிற்றில் கட்டி இரும்பு உருளையில் கயிற்றை மாட்டி கரகரவென கிணற்றினுள் இறக்க வேண்டியது தான். டீச்சரம்மாவுக்கு அது இன்னும் பழக்கமாகவில்லை. பழக்கமானாலும் நீர் நிரம்பிய குடம் மேலே இழுக்கப்பட்டதும் கை நீட்டி அதைப்பிடித்து எடுக்க பயப்பட்டாள். கிணற்றினுள் இறங்க புதிய ஏணியும் கிணற்றோரமாக நேர் கீழே இறங்கியது. மோட்டார் வைத்துக்கொள்ள பெட்டும் கட்டப்பட்டிருந்தது.

ஏகாம்பரம் காலை நேரத்தில் குடங்களோடு வீட்டின் பின்புறம் சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு வீட்டினுள் கொண்டு வந்து விடுவார். அது அவருக்கு தினசரி வேலையாகிவிட்டது. அந்த நேரத்தில் சமையல் அறையில் டீச்சரம்மா பிசியாக இருப்பார். இப்படி தண்ணீர் இழுப்பதும், அதை தூக்கியபடி நடப்பதும் தேவைதான் உடல்நலனுக்கு என்று ஏகாம்பரம் நினைத்துக் கொள்வார்.

டீச்சரம்மா காலையில் எட்டரைபோல தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சென்றால் மாலையில் ஐந்து மணி போலத்தான் வீடு திரும்புவாள். ஏகாம்பரத்துக்கு வயது நாற்பத்தி ஒன்றாகி விட்டது. இன்னமும் தலையில் ஒரு நரைமுடி கூட விழவில்லை. டீச்சரம்மா கமலாவுக்கு இவரைவிட ஐந்து வயது குறைவு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். கமலா இப்போது இருப்பது போல் குண்டாக இல்லாமல் ஒல்லிப்பிச்சானாக டீச்சர் ட்ரெய்னிங் வகுப்புக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் திருச்சியில். இவள் வீட்டு மாடியில் தான் ஏகாம்பரம் வாடகைக்கு தங்கி இருந்தார்.

இவர் எழுதும் படைப்புகளுக்கு முதல் ரசிகையாக கமலா இருந்தாள். வாய்ப்புகள் அதிகம் இருக்கவே ரசிகை காதலியாக மாறி மனைவியாகிப்விட்டாள். இரு வீட்டார் சம்மதத்தோடு தான் திருமணம் இவர்களுக்கு நடந்தது. ஆரம்பத்தில் தன் வயிற்றில் கரு உதிக்காத வருத்தத்தில் எந்த நேரமும் அழுத முகமாய் கோவில், குளமென்று சுற்றினாள் கமலா. சாமியார் கொடுத்த மண்ணை மூன்று நாள் தின்று பார்த்தாள். எல்லாச் சாமியார்களையும் நம்பி காசைத் தொலைத்தாள். ஒரு சாமியாரிடம் கற்பைத் தொலைக்கத் திரிந்த போது உசாராகி விட்டாள். தனக்கு அவ்வளவுதான் கொடுப்பினை என்பதை உணர்ந்து அமைதியாகிப்போனாள்.

முன்பெல்லாம் வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் தொடர்ந்து எழுதிக் குவித்த ஏகாம்பரம் நாளாக நாளாக குறைத்துக் கொண்டார். வாசகர்களுக்காக எழுதிக் குவித்துக் கொண்டிருந்தவர் தன் திருப்திக்காக மட்டுமே எழுத ஆரம்பித்து வருடம் இரண்டாகி விட்டது. புது வீடு வந்து ஒருவார காலம் ஓடிப்போய் விட்டது. இன்னமும் பேனா நீக்காமல் இருந்தால் சரிப்படாது என்ற எண்ணத்தில் பத்துமணியைப்போல தன் அறையில் எழுதும் மேஜைமுன் அமர்ந்தார். இந்த ஒருவாரத்தில் தள்ளித் தள்ளி இருந்த குடும்பங்களில் இருந்து சிலர் வந்து தங்களை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சென்றார்கள். என்ன வருத்தம் இவருக்கு என்றால் அவர்கள் யாரும் பத்திரிக்கை படிப்பவர்களாக இல்லை. ஆட்டு வியாபாரிகளாகவோ, நெசவாளர்களாகவோ இருந்தார்கள்.

ஏகாம்பரத்திடம் தீபாவளி மலருக்கு மூன்று பத்திரிக்கைகள் கட்டுரையும், கதையையும் கேட்டிருந்தன. ஏகாம்பரம் பேனாவை நீக்கிவிட்டால் போதும். என்ன எழுதுவது என்பதில் எப்போதும் தடுமாறவே மாட்டார். எது தோணுகிறதோ அதை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கொடுத்து வைத்தவர் என்று தான் எண்ணினேன். அவருக்கு என் புத்தகங்களில் சிலவற்றை கொண்டு போய் கொடுத்தேன். அவருடையவை சிலவற்றை கொடுத்தார் எனக்கு. அவர் மனைவிதான் என் 57 சினேகிதிகள் நாவலை படித்து விட்டு விமர்சித்தார். என் ஊட்டுக்காரர் எத்தனை புத்தகம் எழுதி இருந்தாலும் இந்த ஒரு நாவலுக்கு முன்னால அவரோட எந்த படைப்பும் நிக்காது! டீச்சரம்மா லேப்டாப்பில் விளையாடினார். முகநூலில் பலரின் படங்களை ஷேர் செய்து மகிழ்ந்தார். ஏகாம்பரம் லேப்டாப் பக்கமே வரவில்லை. அதை பூச்சாண்டி என்றார். அவர் புத்தகத்தை படித்தேனா என்கிறீர்களா? நேரம் தான் இல்லை.

லெட்டர்பேடில் எழுத அமர்ந்தார் ஏகாம்பரம். அந்த நேரத்தில் அவரது அறைக்குள் எதுவோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். திறந்திருந்த அவரின் அறை ஜன்னல்கள் படீர் படீரென அடித்தன. சாத்தியிருந்த அறைக்கதவு மட்ட மல்லாக்க திறந்தது. மல்லிகைபூ வாசம் அறையெங்கும் வீசத் துவங்கியது. சந்திரமுகி சமாச்சாரம் நடப்பதாய் மிரண்டவர் எழுந்து ஜன்னலுக்குச் சென்று கொக்கிகளை மாட்டினார். வெளியே காற்று வீசுவதற்கான அறிகுறி துளி அளவேனும் இல்லை. காற்றே இல்லாமல் ஜன்னல்கள் அடித்துக் கொள்ளுமா? அவர் திகில் கதைகளோ, மூட நம்பிக்கை கதைகளோ இதுவரை பத்திரிக்கையில் எழுதியதில்லை. அவர் எழுதுவது எல்லாமே பெண்களுக்காக. அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தவை எல்லாம் குடும்பக் கதைகளே. பேய் வேலைதான் என்று நினைத்தவர் மடையா! என்று தன்னை திட்டிக் கொண்டார்.

அவரது கழுத்துக்கு அருகில் யாரோ உஷ்ணமாய் மூச்சுவிடுவது போலிருக்கவே திரும்பினார், பெண் உருவம் ஒன்று அசைந்து நிற்பது போல் ஒருகணம் தோன்றியது. அது அடுத்த நிமிடம் இவரது நாற்காலியில் அமர்ந்து உற்றுப்பார்ப்பது போலவும் தோன்றவே, இவருக்கு உடம்பெல்லாம் வியர்த்துப் போய் விட்டது. இப்போது அவருக்கு சந்தேகம் எழவில்லை. ஆவிதான் அது.

வீட்டுக்காரருக்கு முன்பே விசயம் தெரிந்திருக்கிறது. ஊராருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை. வாஸ்து பார்த்து வீடு கட்டியது பேயிற்குத்தான் போல. அறையை விட்டு வெளியேற் ஹாலுக்கு வந்து ஷோபாவில் அமர்ந்தார். இந்த வீட்டில் இனி ஒரு எழுத்து எழுத முடியாது. கமலாவுக்கு கூப்பிட்டு விசயத்தை சொல்லி விடலாமா என்று யோசித்தார். வீட்டின் அழகைப்பார்த்து அட்வான்ஸ் நீட்டியது தவறாக போய் விட்டது. இவருக்கு அருகாமையில் அந்த புகை உருவம் அமர்ந்து உற்றுப் பார்ப்பதை உணர்ந்தார்.

எழுத்தாளர் சார், என்ன நீங்களும் மத்தவங்களைப் போல என்னைப் பார்த்து பயந்துட்டீங்களா? நான் என்ன உங்களை மிரட்டலாம்னோ, கடிச்சுத் திங்கலாம்னோவா வந்தேன்? நான் அப்படி நினைச்சால் கூட உங்களை ஒன்னும் பண்ண முடியாது. வேணும்னா அந்த துணிமணிகளை கீழ விழ வைக்கலாம். ஜன்னலை ஆட்டலாம். இப்படி பண்ணி உங்களை பயமுறுத்த எனக்கு ஆசை இல்ல சார்ஏகாம்பரத்திற்கு இருபது வயதுப் பெண்ணின் குரலாக அது கேட்டது.

என் குரல் கேக்குதா சார் உங்களுக்கு?” என்று காதுக்கருகில் கேட்கவே, “ம்என்றார்.

அப்பாடா! உங்களுக்காச்சும் என் குரல் கேக்குதே ஒரு பேச்சுத் துனைக்கு கூட ஆள் இல்லாமத்தான் சார் இருந்தேன் இங்க

இருந்தேன்னு சொல்றியே இந்த வீட்டுலயா?” பயம் விட்டுப் போகாமல் தான் கேட்டார்.

நான் அந்த கெணத்துல தான் சார் இருக்கேன். உங்ககிட்ட பேசிப் பழகலாம்னு நீங்க வந்த நாள்ல இருந்தே யோசனை. ஒரு வருசத்துக்கும் முன்ன ஒரு குடும்பம் இந்த வீட்டுல வந்து இருந்துச்சுங்க சார். நல்ல குடும்பம். ரெண்டு சின்னப் பிள்ளைக! லட்டு லட்டா அழகா இருப்பாங்க. அந்தப்பிள்ளைக என்கூட நல்லா பழகிடுச்சுக. ஆனாப்பாருங்க அந்த கொழந்தைகளோட அம்மா தான் இந்த வீட்டுல பொம்மைக தனியா பறக்குதுக! குழந்தைகள் தனியா சுவத்தை பார்த்து சிரிக்குதுக! இது பேய் வீடுன்னு காலி பண்ணீட்டு போயிட்டாங்க! அதே மாதிரி நீங்களும் போயிடாதீங்க சார். நான் உங்களை மிரட்ட வரலை. சும்மா பத்து நிமிசம் பேசிட்டு போயிடறேன். அப்புறம் நீங்க எழுதுங்க. என்னோட சோகக் கதையைக்கூட சொல்றேன் அதை எழுதுங்க

உன்னைத் தொட்டுப் பார்க்கட்டுமா நான்

ஐயோ! அப்படி ஆசைப்பட்டு என்னை தொட்டுடாதீங்க சார்

சரி சரி என் மனைவி பயந்த சுபாவம். அவள் இருக்கப்ப வந்து ஜன்னலை ஆட்டிடாதே

உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சுங்க சார். உங்க மனைவியை நான் மிரட்ட மாட்டேன். நான் போகட்டுமா சார் கெணத்துக்கு? நீங்க எழுதுங்க

உன் குரல் இனிமையா இன்னம் சித்த நேரம் கேட்டுட்டே இருக்கலாம்னு இருக்குது

என் குரல் நெஜமா நல்லா இருக்கா சார்?”

ஆமாம், உன் பேர் என்ன? உன்னை நான் பேயேன்னா கூப்பிட?”

என் பேரு டைட்டில்ல வச்சிருக்கீங்கள்ல மல்லிகான்னு. அது தான், நான் போறேன் சார்

போறேன் போறேன்னு சொல்லித் தான் போயிச் சேர்ந்துட்டியே! மறுக்கா எப்ப வருவே?”

நாளைக்கு வர்றேன் சார்ஷோபாவில் புகை உருவம் அசைவது இவர் கண்களுக்கு தெரிந்தது. அதிக உயரம் என்றில்லாமல் சற்று குள்ளமாகத்தான் அது இருந்ததாக பட்டது. ஏகாம்பரம் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். அவள் குரல் அவருக்கு பிடித்திருந்தது. தன் மனைவியிடம் அவர் இதுபற்றி சொல்லவில்லை. பின் தினமும் இவரிடம் மல்லிகா வந்து பேசிச் சென்று கொண்டிருந்தது.

ஏகாம்பரம் எந்த நேரமும் மல்லிகா தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஏங்கும் நிலைமைக்கு வந்து விட்டார். மல்லிகா மல்லிகா என்று காதலாய் உருகத் துவங்கினார். தன் காதலை மல்லிகாவிடம் ஒரு நாள் சொல்லியே விட்டார். தனக்கும் பேசாவிட்டால பைத்தியம் பிடித்த மாதிரி கிணற்றினுள் இருப்பதாக கூறியவள் வரும் பெளர்ணமி அன்று இரவில் பனிரெண்டு மணிக்குச் சரியாய் கிணற்றில் குதியுங்கள்.. உங்கள் ஆசைப்படி என்னை தொடலாம், கட்டிக்கொள்ளலாம், விருப்பம் போல நடந்தும் கொள்ளலாம் என்றாள்.

ஏகாம்பரம் காத்திருந்த பெளர்ணமி நாளும் வந்தது. தன் கணவனின் நடவடிக்கைகள் சிலது வேடிக்கையாக இருந்தது டீச்சரம்மாவுக்கு. கணவரின் முகத்தில் தான் காதலித்த காலத்தில் கண்ட ஒளியை மீண்டும் வசீகரமாய் காண்பதாய் நினைத்தாள். தவிர பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்து விளையாடுவானாம் என்ற பழமொழியை இவரிடமே சொல்லி சிரித்துக் கொண்டாள். பெளர்ணமி இரவில் தன் காதலி மல்லிகாவோடு இணையப்போகும் சந்தோச தருணத்தை எதிநோக்கி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஏகாம்பரத்தை பதினொரு மணியைப்போல கட்டிக் கொண்டு கமலா அசதியாய் தூங்கவும் தன்னையுமறியாமல் பனிரெண்டு மணிக்கு தூங்கிப் போனார் ஏகாம்பரம்.

ஆவிக்கும் கோபதாபங்கள் உண்டு போலத்தான் இருக்கிறது. மல்லிகா மூன்று நாட்கள் பகலில் இவரிடம் அரட்டை கச்சேரிக்கு வரவில்லை. இவரும் சும்மாயிராமல் ஓடிப்போய் கிணற்றை எட்டிப்பார்த்து மல்லிகா என்று மணிக்கொருமுறை கத்திக் கொண்டிருந்தார். மல்லிகா என்ற அது இவரின் கத்தலை அலட்சியம் செய்து விட்டது. பெண்ணானவள் பேயாக இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாதவள் தான். மேலும் இரண்டு நாட்கள் கழித்து இவர் அறைக்குள் வந்தமர்ந்த மல்லிகா அழத்துவங்கியது. ஏகாம்பரம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அடுத்து வரும் பெளர்ணமி அன்று கிணற்றில் குதித்து உன்னை முத்தமிடுவேன் கண்ணே! அழாதே என்று சபதம் செய்தார். சபதம் செய்த பின் தான் மல்லிகா அழுகையை நிறுத்தியது.

இவர்கள் வீட்டுக்கும் கிழக்கே இருந்த வீட்டிலிருந்து இளம் விதவைப் பெண் ஒன்று இரண்டு நாட்களாய் டீச்சரம்மாவோடு தனி அறையில் இரவு நேரத்தில் வந்து படுத்து கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணிற்கு வயது இருபது தான் ஆகியிருந்தது. சொந்த மாமனுக்கு ஆறு மாதம் முன்பாக கட்டி வைத்திருந்தார்கள். அதாவது இவர்கள் வருவதற்கு முன்பாக நடந்த வைபோகம்.

இரண்டு வாரம் முன்பாக அவள் கணவன் டூவீலரில் செல்கையில் லாரியில் அடிபட்டு மருத்துவமனையில் இரண்டு நாள் உயிருக்காக போராடி போய்ச்சேர்ந்து விட்டான். இந்தப்பெண்ணுக்கு ஆதிகாலத்து முறைப்படி வெள்ளை உடையை உடுத்தி விட்டார்கள். இரண்டு முறை அரளிக் கொட்டையை அரைத்து குடித்து சாக இந்தப்பெண் முயற்சிக்கிறது என்று மாமியார் இவளை பெற்றவர்களிடமே கூட்டி வந்து விட்டுப் போய் விட்டாள். எந்த நேரமும் பெண்பிள்ளைக்கு காவலா இருக்க முடியும்? வேறு பொழப்பு இருக்கிறதல்லவா மற்றவர்களுக்கு!

இவளுக்கு மண்டையில ஏறுறமாதிரி புத்தி சொல்லிக் குடுங்க டீச்சரம்மா! என்று இந்த பெண் வீட்டார் விதவைப் பெண்ணை கமலாவிடம் இரவு நேரத்தில் ஒப்படைத்து விட்டுப் போவார்கள். கமலாவும் அந்தப் பெண்ணுக்கு புத்திமதிகளை சொல்லி தன்னுடன் கூடவே படுக்க வைத்துக் கொள்வாள். அந்தப்பெண்ணுக்கு இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய தண்டனையா? என்று ஏகாம்பரம் கவலைப்பட்டார். தன் கதைகளில் இத்தனை காலம் இளம் விதவை என்று எழுதுகையில் அவர் மனதில் பெரிய சோகம் வந்து அப்பிக் கொண்டதில்லை.

வாசகர்கள் தான் அடப்பாவமே! என்று உச்சு கொட்டுவார்கள் என்று மட்டுமே அவருக்கு தெரியும். கண்ணுக்கு எதிரே சின்னப்பெண் இப்படியிருக்க அதிர்வாகவே இருந்தது. அவள் பெற்றோரிடம் பேசி துணியையாவது மாற்றிவிட வேண்டுமென நினைத்தார். அடிக்கடி அந்தப் பெண்ணிடம், “நாங்க இருக்கோம் தைரியமா இரும்மா!” என்றார்.

இவரது புத்தக அடுக்கிலிருந்து தேடியெடுத்து நல்ல புத்தகங்களை அவளிடம் பகல் நேரத்தில் வாசிக்க கொடுத்தார். எதுவும் யோசிச்சுட்டே இருந்தாலும் திரும்ப வரப்போறதில்ல! என்பார். அந்தப்பெண் தலையை ஆட்டிக் கொண்டு இவரிடம் புத்தகம் வாங்கிப் போகும். மல்லிகாவுக்கு அந்தப் பெண்ணின் சோகக் கதையை இவர் சொன்னார்.

அதெல்லாம் விதி. அந்தப் பெண்ணும் என்னைப்போலவே பாவம். எனக்கு நடந்த மாதிரியே அந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கு. எனக்கு நீங்க கிடைச்சீங்க என் மேல அன்பா, பாசமா இருக்க. அதே மாதிரி அந்தப் பெண்ணுக்கும் ஒரு நல்லவரு கிடைப்பாரு. நாளைக்கு பெளர்ணமி தெரியுமில்ல. அந்தப்பொண்ணுக்கு பரிதாப்படறதை விட்டுட்டு என் மேலயும் கொஞ்சம் பரிதாபப்படுங்க. என் விசயத்தை மறந்துடாதீங்கஎன்றது மல்லிகா. ஏகாம்பரம் தேதிக் காலண்டரை நோக்கி ஓடினார். ஆமாம், நாளைக்கு பெளர்ணமி. ஆவிக்கு எப்படி தெரிகிறது இதெல்லாம்! கிணற்றினுள் காலேஜ் பீடிக்காரன் காலெண்டர் மாட்டியிருக்கிறதோ!

எதிர் நோக்கிய இரவு வந்து விட்டது. ஏகாம்பரம் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடையிட்டார். இரவு எட்டரை மணிபோலவே டீச்சரம்மாவும் இவரும் சாப்பிட்டு விட்டனர். அந்தப்பெண் எட்டுமணி போலவே வந்து டீச்சரின் படுக்கையறையில் போய் படுத்துக் கொண்டு ரமணிசந்திரன் நாவல் படித்துக் கொண்டிருந்தது. கமலா இவருக்கு குட் நைட் சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்றாள். இவரை கட்டியணைத்து சென்ற முறை போல் தூங்கச் செய்ய யாருமில்லை. மல்லிகாவே இவரை வந்து தட்டி எழுப்பலாம். ஆனால் இரவில் பேய்க்கே பேய் பயம் இருக்கும் போல இருக்கிறது. அவள் இரவில் வெளிவருவதேயில்லை. நடையாய் நடந்து கால் சோர்ந்து போய் விட்டது ஏகாம்பரத்துக்கு. இரண்டு மணி நேரத்தில் படுக்கையில் கால் வலியில் போய் சாய்ந்தார்.

தொம்மீர்என்றொரு சப்தம் காதுகளில் தெளிவாக விழவும் கண் அயர்ந்திருந்தவர் திடுக்கிட்டு விழித்து அடடா! என்று மணி பார்த்தார். சரியாய் பனிரெண்டு! அவசரமாய் ஓட்ட நடையில் வந்தவர் பின் கதவை நீக்கி ஓட்டமாய் ஓடி கிணற்றுத் திண்டில் ஏறிக் குதித்தார். கிணற்றில் குதித்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னாளே மல்லிகா! நிஜம் தான்! ஆழத்தில் இருந்து மல்லிகாவை கட்டிக் கொண்டு மேலே வந்தவர் மோட்டார் பொறுத்த இருந்த திண்டின்மீது மல்லிகாவைத் தள்ளி தானும் ஏறிக் கொண்டதும் அணைத்து இறுக்கிக் கொண்டுநீ தேவதை மல்லிகாஎன்றார்.

கிணற்றின் உச்சியில்பாவி.. சண்டாளி இப்படி பண்ணிட்டியேடி!” என்ற கூக்குரலும் அதைத் தொடர்ந்து இரண்டு டார்ச் லைட் ஒளியும் இவர்கள் மீது விழுந்தது. இரண்டு பேர் கிணற்றில் குதித்தார்கள்.

திடீரென விழித்த டீச்சரம்மா பக்கத்தில் படுத்திருந்தவளைக் காணாமல் எழுந்து வெளிவர வீட்டின் பின் கதவு திறந்திருப்பதை பார்க்கையில்தொமீர்என்ற சப்தம் கிணற்றுப் பக்கத்திலிருந்து கேட்கவும் முன் வாசல் ஓடிவந்து சப்தம் போட்டிருக்கிறார். அதைக் கேட்டுத்தான் கிழக்கு வீட்டிலிருந்து முதலில் ஓடி வந்தார்கள். அடுத்து இன்னொருதொம்மீர்சப்தத்தையும் கேட்டார் டீச்சரம்மாள். கடைசியாக ஏகாம்பரத்தை எல்லோரும் பாராட்டினார்கள். “உடனே குதிச்சு தைரியமா நம்ம பொண்ணை காப்பாத்திட்டாரு. இவரு மட்டும் இல்லீன்னா நம்ம பொண்ணு அவ்ளோ தான்.”

அசடு வழிய சம்பவத்தை ஏகாம்பரம் என்னிடம் விவரித்த போது, “சும்மா தமாஸ் பண்ணாதீங்கஎன்றேன்.

தமாஸ் இல்லங்க பாருங்க கிணறு இருந்த இடத்தை ஓனரு மூடிட்டாரு. போர் மிஷின் ஓட்டி பைப் போட்டாச்சு பாருங்கஎன்று காட்டினார் ஏகாம்பரம். எனக்கு கிணத்தைக் காணோம் என்ற வடிவேலு தமாஸ் ஞாபகம் தான் வந்தது. கதையாகவே ஏகாம்பரம் வாழ்கிறார் என்று புரிந்தது. இவருக்கும் முன்னால் என் எழுத்து தூசுக்கு சமானம். இன்னொரு குண்டும் வீசினார். மல்லிகா கிணற்றை மூடிய நாளில் இருந்து வருவதில்லையாம்.

விசாரிக்கையில் கிழக்கு வீட்டுக்காரருக்கு பெண்பிள்ளையே இல்லை இரண்டு பையன்கள் தான் என்றார்கள். கடைசியாக டீச்சரம்மாவிடம், ஏன் இப்படி? என்று கேட்டேன். அவரு அப்பப்ப அப்படித்தான், எழுதுற கேரக்டராவே மாறிப் போயிடுவாரு. என்னைக்கூட தங்கச்சி தங்கச்சின்னு ஒரு நாள் கொஞ்சுவாரு. அடுத்த நாள் அம்மான்னு கூப்பிடுவாரு, என்றார். இப்போது அவர்கள் மாற்றல் வாங்கிக் கொண்டு வேறு ஊர் போய் விட்டார்கள். எழுத்தாளர் ஏகாம்பரம் மறக்க முடியாதவர் தான்.

சிலம்போசைஅக்-2012

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *