நீங்கள் சலூன் கடை தேடிச்சென்று முகச்சவரம் செய்து கொள்பவரா? இல்லை வீட்டிலேயே நீங்களாக கண்ணாடி பார்த்து சவரம் செய்து கொள்பவரா? தலை முடியை நீங்களாகவே குறைத்துக் கொள்பவரா? என்னடா இத்தனை கேள்விகள்? என்று பார்க்க வேண்டாம். இப்போதெல்லாம் முகச்சவரம், கட்டிங் என்று கடைக்குச் சென்றால் அவர்களின் சங்கம் நிர்ணயித்த விலைப்பட்டியலை பார்வைக்கு ஒட்டி வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு சிலர், “அடுத்த மாசம் பார்த்துக்கலாம்என்று தாடியோடே வீடு திரும்பி விடுகிறார்கள்.

என் கிராமத்தில் இப்போது இரண்டு நாவிதர்கள் இருக்கிறார்கள். அண்ணனும் தம்பியும். இருவருக்குமே வயது 60க்கும் மேலாகிவிட்டது. அண்ணன் பெரிய அப்புக்குட்டி தம்பி சின்ன அப்புக்குட்டி. இவர்களின் தந்தையார் கருமன் இறந்து இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. கருமன் தன் கடைசி காலம் வரை சைக்கிளில் ஊரூராக சென்று வீடு வீடாக சவரம் செய்தார். அவர் இறக்கையில் 90 வயதிற்கும் மேல் இருக்கும்.

இப்போது 75 வயதான பெரிய அப்புக்குட்டி டிவிஎஸ்சில் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு டுர்ர்ர் என்று சென்று கொண்டிருக்கிறார். இவர் வாரிசுக்கு கத்தி பிடிக்க வராது. இவர்களோடு ஊர் அடப்பப்பையுடன் சுற்றும் நாவிதர்களை இனி காண வாய்ப்பு இருக்காது. கோவில் விசேசம் என்றால் வீடு வீடுக்கு அரிசி, பருப்பு, வருடாந்திர தொகை வாங்குவது இவர்கள் வழக்கம். இன்னும் கொஞ்சம் நாளில் இந்த வழக்கம் கிராமங்களில் மாறிவிடும்.

உள்ளூர் குடும்பம் ஒன்று அப்புக்குட்டிகளிடம் சவரம் செய்தாலோ செய்யா விட்டாலோ வருடக்கூலி தந்துவிட வேண்டும். யார் இப்படியான அமைப்பை எத்தனை காலம் முன்பு உருவாக்கி வைத்தார்களோ தெரியவில்லை. (துவைப்பவர், பூசாரி) இவர்களிடம் முடியை குறைத்துக் கொள்ளத்தான் முடியும். அட்டாக் கட்டிங் என்றோ, பங்க் என்றோ, ஸ்டெப் என்றோ பேச முடியாது. முன்னாடி சீவுறதுக்கு கொஞ்சம் துளி உட்டு பின்னாடி கொறைச்சுடு! ஓரம் வெட்டி விடு என்றுதான் சொல்ல முடியும். சவரம் செய்யாதிருப்பது நல்லது. கண்ணாடி போட்ட பெரிய அப்புக்குட்டி நிதானமாகத்தான் இழுப்பான். காயங்கள் இருப்பது சகஜம். வெட்டுக்காயம் சிலசமயம் பெரிதாக பாலமாககூட விழுந்து விடும். ஊர்நாயம் பேசிக்கொண்டே இழுப்பது அவர் வழக்கம்.

வாயில் வெத்தலை பாக்கு இருக்கும். பேசப்பேச எச்சில் நம் முகத்தில் தெறிக்கும். நன்றாக இருக்கிறதோ இல்லையோ, “இந்தக்கட்டாப்பு அருமையா இருக்குதுங்க! பேஷாப் போச்சுஎன்றுதான் சொல்வார். காத்தால மொதல் கட்டிங்கு! என்று பதினொருமணி வரை சொல்லி பத்து பத்து ரூபாய் வசூல் செய்து விடுவார். சில்லறை இல்லை என்றால், “க் கடைக்கி போ..ப் போயி அவங்கிட்ட ச் ச் சில்லறை குடுத்து வா வ் வாங்கறீங்க? நா இளிச்சவாயனா போயிட்டனா?” என்பார். அவருக்கு திக்கு வாய்!

எட்டு வயது வரை தலைமுடி பற்றி கவலை கொள்ளாத என் சன் இப்போது பதினொரு வயதில், சீப்பு போட்டு சீவறதுக்கு முடி உடாமாட்டீங்கிறே அப்புகுட்டி. பள்ளிக்கூடத்துக்கு தலைசீவிட்டு போறாப்பிடி வெட்டி உடு! மொட்டை அடிச்சு உட்டுடாதே! என்கிறான். எனக்கு வந்த அதே பிரச்சனை தான். நான் சிறுவனாய் இருக்கையில் கட்டிங் என்றால் ஓடும் என்னை துரத்தி வந்து பிடித்துத் தான் தூக்கி வந்து அமரவைப்பார் என் தந்தையார். தலையில் சீப்பு வைத்து சீவ வேண்டும் என்றால் இரண்டு மாதம் ஆகும்.. வாழ்வில் முடி வெட்டுவதற்காகவெல்லாம் தந்தையாரிடம் அடிபட்டவன் நானாகத்தான் இருப்பேன்.

இன்னும் சிலரை சந்தித்திருக்கிறேன். அவர்களாகவே கத்தரியில் முடியை குறைத்துக் கொள்பவர்களை. அப்படி சந்தித்த முதல் நண்பன் தஞ்சையில் இருந்து 20 வருடம் முன்பாக என்னை சந்திக்க வந்த நட்சத்திரன். சுயமாக சவரம் செய்பவர்கள் நூற்றுக்கு அறுபது சதவீதம் பேர் இருக்கிறார்கள். அந்தக்கூட்டத்தில் நானும் ஒருவன்.

என் சென்னிமலை நண்பன் ரகுநாதன் புத்தக வாசிப்பாளன். பாலகுமாரன், பி.கே.பி என்று வாசிப்பவன். தெரியாத் தனமாக சாந்தாமணியை ஈரோடு புத்தக கண்காட்சியில் வாங்கி வந்து படித்து விட்டான். சென்னிமலை தேவகிரி, அன்னமார், பேருந்து நிலையம் என்றெல்லாம் வரவும் மனுசன் குஜாலாகிவிட்டான். இத்தனைக்கும் தறிக்குடோனில் தறி ஓட்டி தன் மனைவி, குழந்தைகளைக் காப்பவன்.

கமர்சியல் எழுத வருகிறேன் என்று சில காலமாய் நான் கூவிக்கொண்டே இருக்கிறேன். அதற்கு இலக்கிய வாசிப்பு ஆகாது தான். சுந்தரராமசாமியையும், நாகராசனையும் படித்து விட்டு எப்படி கமர்சியல் எழுதுவது? சுஜாதாவை ஆரம்ப காலங்களில் படித்ததோடு சரி. மீண்டும் பாலகுமாரனும், சுஜாதாவும் வாசிக்க தேவைப்பட்டார்கள். புத்தகக் கண்காட்சியில் நுழைந்து உயிர்மை ஸ்டாலில் சுஜாதாவை அள்ளிக் கொண்டு நான் கிளம்புறேங்க வேணுங்கறதை எடுத்துட்டேங்க! என்று மனுஷ்யபுத்திரனிடம் மற்ற எழுத்தாளர் சொல்வது போல் சொல்லிக் கொண்டு கிளம்பும் பழக்கமும் என்னிடம் இல்லை.

இருபது நாளில் பண்டமாற்று முறையில் அவனுக்கு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று கொடுத்து சுஜாதாவை புறட்டினேன். சுஜாதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஸ்டைல் மட்டுமே! எந்தக்கதையை எப்படி சொன்னால் சிறப்பாக வரும் என்பதை மட்டும் கற்றுக் கொள்ள 20 நாட்கள் போதுமானதாக இருந்தது. இது ஐந்தாம் வகுப்பு பாடம் தான். எஸ்.ராமகிருஷ்ணனை வாசிக்க முடியவில்லை என்று கொண்டு வந்து நீட்டினான் ரகுநாதன். எனக்கும் அதுதான் பிரச்சனை என்றேன்.

மேலப்பாளையம் டாஸ்மார்க் பாரிலிருந்து வெளிவந்து வண்டியை எடுக்கலாம் என்று நின்ற சமயத்தில் தன்பைக்கில் அருகில் வந்து நிறுத்தி வணக்கம் வைத்தான் ரகுநாதன். தாடி இல்லாமல் கன்னத்தில் வெட்டுக்காயத்துடன் இருந்தவனிடம், என்ன ஆளே அடையாளம் தெரியலையே! தாடியோட இருப்பே எப்பயும்! என்றேன். அது ஒரு கதைங்க! என்று ஆரம்பித்தான்.

மேலப்பாளையம் முருகன் சலூன்கடை முன்பாக நின்றிருந்த ரகுநாதன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து புகை ஊதியபடி டிச்சில் வீசி விட்டு கடையினுள் நுழைந்தான். எப்போதுமே ரகுநாதன் கட்டிங், சேவிங் என்றால் முருகனிடம் செல்வது தான் வழக்கம்.

கடையினுள் முருகன் ஒரு பெரியவருக்கு தாடையில் நுரைபொங்க பிரஸ் போட்டபடி இருந்தான். ஞாயிறு என்றால் எப்போதும் கடையில் கூட்டமாய்த்தான் இருக்கும் என்று நினைத்தபடி தான் இவன் வந்தான். கடையில் அந்த இருவரைத் தவிர யாருமில்லை என்றபோது திருப்தியாய் இருந்தது. இன்று நல்ல நேரம் தான் என்று ரகுநாதன் நினைத்தான்.

வாங்க, ஏது ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் உங்களை ஆளவே காணமுன்னு இன்னிக்கி மத்தியானம் கூட நினைச்சேன். பொழுதுக்குள்ள கடை தேடி வந்துட்டீங்க. தாடி வேற புல்லா உட்டுட்டீங்க? பெஞ்சுல உட்கார்ந்து சித்த நேரம் பேப்பரை பொறட்டுங்க. இந்த ஒரு சேவிங்கை முடிச்சுடறேன்என்றவன் சவரக்கத்தியில் ப்ளைடு மாற்றி பெரியவருக்கு இழுக்க ஆரம்பித்தான். நுரையோடு சேர்த்து இழுத்ததை தன் இடதுகையில் மணிக்கட்டுக்கும் கீழே அப்பிக் கொண்டான்.

வீட்டுல சம்சாரம் தொல்லை பெரும் தொல்லை முருகா! சென்னிமலை படிக்கட்டுல சாமியாராப்போயி காவி வேட்டி கட்டீட்டு உட்கார்ந்துக்கற நெனப்பான்னு கேட்டுப்போட்டா! பையனும் வேற எடுத்துடுப்பா தாடிய நல்லாவே இல்லீங்கறான். தறிக்குடோனுக்கு போனா காதல் தோல்வியாங்கறானுக! மனுசன் தாடி கூட நிம்மதியா உட முடியல! போச்சாது போன்னு ஒரே முடுவா வந்துட்டேன்என்றான் முருகனிடம்.

பையன் இந்த வருசம் எத்தனாவது போறானுங்க? கொமரப்பாவுக்கு போறானா? இல்ல வேன் ஏறி ஸ்டார் மெட்ரிகுலேசன் போறானா? கூட்டீட்டு வந்திருந்தீங்கன்னா அவனுக்கும் ஒரு வெட்டு வெட்டீட்டு போயிருக்கலாம் நீங்க!”

ஸ்டாருக்கு அனுப்புற அளவுக்கு நம்மகிட்ட வேணுமல்ல முருகா மடியில! கொமரப்பாவுல தான் நாலாம் வகுப்பு போறான்.. மேலப்பாளையத்துல சேர்த்தியிருந்தா அம்மாவே புத்தகம், துணிமணி, செருப்பு எல்லாம் குடுத்திருக்கும்.”

எம்பட பொடுசுக ரெண்டும் மேலப்பாளையம் தானுங்க போவுதுக. பொட்டாட்ட போயிட்டு பொட்டாட்ட வருதுக

ரகுநாதன் எதிர்க்கே பெரிய கண்ணாடியின் மேலே தொங்கவிடப்பட்டிருந்த சுவாமி படங்களை பார்த்தான். வடக்கு சுவற்றில் பெரிய சைசில் நமீதா, தமன்னா, அசின் கவர்ச்சி காட்டி நிற்கும் படங்களை பார்த்தான். இப்போது தான் சமீபமாக மாற்றி இருக்கிறான் போல. முன்பு ரஜினி, கமல், என்று சுவற்றில் இருந்தார்கள்.

காலேஜ் பசங்க நம்ம கடைக்கி வர ஆரம்பிச்சுட்டாங்க. ரஜினி, கமல்னு வயசானதுக எல்லாம் எதுக்குன்னு வேற கேட்டுட்டே இருந்தாங்க. போனவாரம் வெள்ளிக்கிழமெ சந்தையில போயி வாங்கியாந்து மாட்டிட்டனுங்க. ஜம்முன்னு எடுப்பா இருக்குது பாருங்ககடையில் இருந்த வாட்ச்சை பார்த்தான் நகுநாதன். அது 4 மணி என்று காட்டியது. நாற்காலியில் இருந்த பெரியவருக்கு சேவிங் முடிந்ததும் கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப்பார்த்தார். வலதுபக்க மீசையை ஒதுக்கி விடச் சொன்னார். முருகன் அதை ஒழுங்கு செய்து விட்டு, சூப்பர்! என்றான். பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாயை அவர் எடுத்து முருகனிடம் கொடுத்தார். நாற்காலியிலிருந்து இறங்கி சட்டையை உதறிப் போட்டுக் கொண்டார்.

அந்தசமயத்தில் சிறுவன் ஒருவனைக் கூட்டிக் கொண்டு பெரியவர் ஒருவர் கடையினுள் நுழைந்ததும், “என்ன முருகா?” என்று வந்ததும் சேரில் ஏறி அமர்ந்து கொண்டார். “வெயில் பாரு நாலு மணிக்கு என்ன போடு போடுதுன்னு! அந்த காத்தாடிய சித்த போடுஎன்றார்.

போட்டுத்தானுங்க உட்டிருக்கேன், கரண்டு வந்தா தானா சுத்தும்! இதென்னுங்க இவருக்கு நாலே இழுப்பு!” என்று முருகன் ரகுநாதனிடம் சொல்லி விட்டு பிளைடு மாற்றினான் கத்தியில். பையன் நாற்காலியை பிடித்துக்கொண்டு சுற்றிலும் நோட்டம் விட்டான்.

தம்பி, யாரைக் கட்டிக்கிறீன்னு சொல்லு! தமன்னாவையா? நமீதாவையா?” என்றான் முருகன். பையன் வெட்கமாய் சிரித்து நெளிந்தான். “வெக்கத்தை பாருங்க உங்க பொடியானுக்கு! வாயில வெரலை வெக்கக் கூடாது எடு சாமி கைவிரலை!” என்றான். படக்கென நொடியில் எடுத்துக் கொண்டான் பையன். மணி 5 ஆகியிருந்தது பெரியவருக்கு சேவிங் முடியும் போது.

பையனுக்கு பொடணீல மெசின் போட்டு வெட்டி உடு முருகா! பத்தே நாள்ல காட்டுப்புல்லு கணக்கா குமிஞ்சிடுது வாடா சாமிஎன்று பையனைத் தூக்கி சேரில் அமரவைத்து விட்டார். “இதென்னுங்க நாலே ஓட்டு மெசின்ல ஓட்டி முடிச்சுடறேன்என்று முருகன் இவனிடம் சொல்லி விட்டு மெஷினை எடுத்துக் கொண்டான். பையன் கத்தலை ஆரம்பித்து விட்டான் பின்னங்கழுத்தில் மெஷின் உட்கார்ந்தவுடன்.

உன்ற சோட்டு பசங்க எங்கடைக்கி வந்தா பொட்டாட்ட உக்காந்து கட்டிங் வெட்டீட்டு போவாங்க தெரியுமா! நீ என்னமோ அழுவுறியா? ஆட்டாத சாமி, காதை மெசினு வெட்டிப்போடும். அப்புறம் காக்காயிக்கி தான் உன் காதை தூக்கி வீசோணும்என்றதும் அழ அழ பையன் சிரித்தான். பொடியனின் பின்மண்டையில் உச்சிவரை மெஷினை மேலே ஏற்றினான். ரகுநாதன் சாலையை வேடிக்கை பார்த்தான். பையனுக்கு கட்டிங் முடியும் போது மணி 6 க்கும் அருகில் வந்து விட்டது. பெரியவர் முருகனுக்கு பணம் கொடுத்து விட்டு பையனோடு கிளம்பினார். இவன் எழுந்தான். இனி யாரேனும் வந்து அமர்ந்து விடுவார்களோ என்று பயந்தான். முருகன் பீடி ஒன்றை பற்றிக் கொண்டுடீ ஒன்னு போட்டுட்டு வந்துடறேனுங்கஎன்று சாலையைக் கடந்து அவசரமாய் போனான் எதிரே இருந்த டீக்கடை நோக்கி.

திரும்பி வந்த முருகன் கடை விளக்கைப் போட்டு சுவாமி படங்களுக்கு ஊதுபத்தி பற்ற வைத்து காட்டினான். பின் அதை விநாயகர் போட்டோ சந்தில் குத்தினான். பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்து எண்ணாமல் கல்லாவில் போட்டு சாத்தி பூட்டி விட்டு சாவியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். “இதை ஒரு இழுப்பு இழுத்து வுடு முருகா! நேத்தே முடியாது கூட்டமிருக்குன்னு சொல்லீட்டே!” என்று இவன் வயது மதிக்கத் தக்க ஒருவன் வந்து சேரில் அமர்ந்தான்.

இவுரு நாலு மணியில இருந்து உக்காந்திருக்காருங்க! அவருக்கு பண்டி உட்டுட்டு பண்ணி உடறேன்என்றான் வந்தவனிடம் முருகன். அவனோ ரகுநாதனைப் பார்த்து, “நான் செந்தாம்பாளையம் வரைக்கும் இனி பண்டீட்டு சைக்கிள்ல போவணுமுங்க! படக்குன்னு பண்ணீட்டு கிளம்பிடறனுங்க!” என்றான். முருகன் ப்ளைடு மாற்றினான். இவன் தலையாட்டி விட்டான். ரகுநாதனுக்கு சேவிங் செட் வாங்கிக் கொண்டு வீடு போகும் எண்ணம் வந்து விட்டது. அது ஒரு கம்பசூத்திரமல்ல தான். செந்தாம்பாளையத்தானுக்கு ப்ரஸ் போட்டான் முருகன். இவன் எழுந்தான்.

இருந்ததே இருந்தீங்க சித்தே இருங்க, பண்டீட்டே போயிடலாம்என்றான் முருகன்.

நானும் போயி எதுத்தாப்புல கடையில டீ ஒன்னு போட்டுட்டு வந்துடறேன்என்று கடையை விட்டு வெளிவந்தான். சாலைக்கு வந்தவன் மெடிக்கல் கடை ஒன்றில் புது செட் வாங்கிக் கொண்டு வீடு போகையில் தோன்றியது. தனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லோருக்குமா?. கன்னத்தில் வெட்டுக் காயத்திற்கு கதை சொன்னவனிடம் அடுத்தமுறை வெட்டில்லாமல் சவரம் செய்ய வாழ்த்தை சொல்லிவிட்டு வந்தேன்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book