ஏப்பா அறிவு கெட்டவனா இருக்கியே, அந்தப்பிள்ளையப் போட்டு தெனமும் குப்பு குப்புன்னு சாத்துறதையே பொழப்பா வச்சிட்டு இருக்கியே, படாத எடத்துலபட்டு பொசுக்குனு உசுரு போயிட்டா அப்புறம் வான்னா வருமா உசுரு? நாலு பேரு வரப்போக இருக்கிற எடத்துல தெனமும் உன்னோட ரோதனையா இருக்குதே?” என்று சப்தம் போட்ட ராமசாமிக் கவுண்டர் முருகணை கடைக்குள் இருந்து சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து வந்து கடை வாசலில் நிறுத்தினார்.

நல்லா நாலு வார்த்தை நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி கேளுங்கய்யா என்னோட ஊட்டுக்காரனை. பொழைக்க வந்த எடத்துல பொழைப்ப பாக்காம குடி என்ன வேண்டிக் கெடக்குதுங்கய்யா?” என்ற கண்ணம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டே டேபிளில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தேங்காய் சட்னி ஊற்றினாள். இவள் இப்படி சொன்னதும் மிதப்பு கூடிவிட்டது கவுண்டருக்கு.

நாளையும் பின்னியும் உன்னோட ரவுசு கேட்டுதுன்னு வச்சுக்கோ எனக்கு சுத்தப்படாது. கடையைத் தூக்கிட்டு ஓடீருங்க ரெண்டு பேரும். ஏதோ வழி இல்லாம வாய்ப்பாடி வந்துட்டீங்களே பொழைச்சிக்கட்டுமுன்னு ரோட்டோரத்துல சாலையை போட்டுக்கங்கன்னு சொன்னதுக்கு கொலைக் கேசுக்கு நாங்க போலீஸ் ஸ்டேசன் நடக்கோணுமாட்ட இருக்குதா! நாளையில இருந்து உம் பொண்டாட்டி கிட்ட சண்டைக் கட்டமாட்டேன்னு சொல்றா! குடி என்னடா குடி உனக்கு? நாலு காசு சம்பாதிக்க வந்தியா இல்ல குடிச்சு அழிக்க வந்தியா? யாருடா குடிக்காம இருக்காங்க? பதனமா பொழைக்கிற வழியப்பாரு. இத்தனை சொல்றேன் எருமை மாடு மேல மழை பேஞ்சாப்ல நிக்கறியேடா! சரீங்க கவுண்டரேன்னு ஒரு வார்த்தை சொல்றானா பாரு

என்னை மன்னிச்சுடுங்கஎன்று கவுண்டரின் காலில் நீட்டி விழுந்தவன் பிறகு கடை மூடும் வரை எழுந்திருக்கவேயில்லை.

நாயி வாலை நிமுத்த முடியுமுங்களா மாப்ளே! நீங்க சொன்னதை இந்தக்காதுல வாங்கி அந்தக் காதுல விட்டிருப்பான். போதையில இருக்கிறவனுக்கு புத்தி சொன்னா மண்டையில ஏறுமுங்களா? வந்து நாலு புட்டுமாத் தின்னு போட்டு ஊரு போற வழியப் பார்ப்பீங்களாஎன்று கடையினுள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் கூப்பிட ராமசாமிக் கவுண்டர் கடைமுன் இருந்த குடத்தில் தண்ணீர் மோந்து ஓரமாய் கைகழுவிவிட்டு கடைக்குள் வந்தமர்ந்தார். கண்ணம்மா அவருக்கு இலை போட்டு தண்ணீர் தெளித்தாள்.

கண்ணம்மாவும் அவள் புருசன் முருகனும் என் கிராமத்தினுள் நுழைந்து ஒரு வருடம் போல ஆகிவிட்டது. இன்ன சாதி என்றும் வடக்கே சத்தியமங்கலம் பக்கமிருந்து வருவதாகவும் உள்ளூஉர் பெரிய மனிதர் காலில் விழுந்து கெஞ்சி ரோட்டோரமாக சாலை போட்டு இட்லி வியாபாரம் துவங்கி விட்டார்கள். எழுபது வீடுகள் இருக்கும் கிராமத்தில் இட்லிக்கடை போட்டு சன்பாதிப்பது நிசமா? என்று கேட்டவர்கள் எல்லோரும் இப்போது கண்ணம்மா கடையின் நிரந்தர வாடிக்கையாளர்கள். இட்லி சும்மா புசு புசுன்னு நமீதா மாதிரி இருக்குதுப்பா. இது குஷ்பு இட்லிக்கும் சேர்த்தி இல்லை. நமீதா இட்லியே தான் என்று பேசினார்கள். அவர்கள் வேடிக்கைக்காக சொன்னாலும் இட்லி மீது ஆசையே இல்லாத எனக்கும் அது சுவையாகவே இருந்தது.

நைட்டுல சட்னிக்கும் குழம்புக்கும் காரம் கொஞ்சம் தூக்கலா போட்டுருவாளாட்ட இருக்கு மாப்ளே. அடிச்ச போதை கிர்ர்ருன்னு ஒரு தூக்கு தூக்குது என்பார்கள். பக்கத்து சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்தெல்லாம் சாப்பிட வரப்போக இருந்தவர்கள் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல பொட்டணமும் கட்டிக் கொண்டார்கள். நமீதா இட்லியின் புகழ் சுற்றுப்புறமெங்கும் பரவிற்று. குஷ்பு இட்லி பற்றி தகவல் குஷ்புவுக்குத் தெரியும். நமீதாவுக்கு தன் பெயரில் இட்லி இருப்பது தெரியாது. குஷ்புவிற்கு கோவில் இருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியாது.

கண்ணம்மா இட்லிக்கு என்னத்தப் போட்டு ஊறவைக்கிறாள்? ஒருநாள் அவள் மாவாட்டுறப்ப என்ன பொருள் போடறாள்னு நைசா கேட்டுத் தெரிஞ்சிக்கோணூம். நாம சுட்டா கல்லாட்டவும், ரப்பர் பந்தாட்டவும் கெடக்குதுகளே! தக்காளி கடைஞ்சு கொழம்பு வச்சா கொழம்பாட்டவா இருக்குது? நாயிச் சட்டியில ஊத்துன கொழம்பை நாயே மோந்து பாத்துட்டு ஓடீடுது, என்ரே உள்ளூர் பெண்கள் பேசிக் கொண்டார்கள். எது எப்படியோ கண்ணம்மா கடை இட்லி என்றால் ஒரு பேர் இருந்தது. இங்கே கிராமத்தில் பிழைப்பதற்கு நகர்ப்புறத்தில் போய் அவள் பிழைக்கலாம். ஏனென்றால் நகர்ப்புறத்தில் இட்லிகள் இட்லிகளாய் இருப்பதில்லை. இட்லியாக அவைகள் இருந்தால் சட்னி சுவைப்பதில்லை.

உள்ளூரில் இருந்து நகர்ப்புறம் செல்வதென்றால் நான்கு திசைகளிலும் ஏழு கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். இரண்டே பேருந்துகள் இருந்தன. அதுவும் நேரத்திற்குத் தான். எழுத்தாளன் என்பதால் என்னை தேடிவரும் நண்பர்களை அழைத்துவர நான் ஏழு கிலோ மீட்டர் டூவீலரில் பயணிக்க வேண்டும். எதுக்கு அவ்ளோ தூரத்திலிருந்து சிரமப்பட்டு வரவேண்டும்? என்றே கேட்பேன். ஏகப்பட்ட எழுத்தாளர்களை சந்தித்துள்ளதாகவும் உங்களை நேரில் சந்திக்க ஒன்னரை வருடமாக திட்டமிருப்பதாகவும் இப்போது தான் சாத்தியப் பட்டதாகவும் கூறுவார்கள். வந்தவர்களுக்கு பால் இல்லாத காபியும், நான் என்ன சாப்பிடுகிறேனோ அதுவும் தான். அசிஸ்டெண்ட் இயக்குனர்கள் என்று சிலர் வந்தார்கள். என் நேரத்தைக் கொன்று போனார்கள். அவர்களின் கடையை நான் முழுக்க கேட்டு கருத்து சொல்ல வேண்டும். நொந்து நூலாகி திரும்பவும் அவர்களை பேருந்துக்கு கொண்டு போய் விட வேண்டும். அவர்கள் பை! சொல்லி போய் விடுவார்கள். நேராக வெறிஒயாய் டாஸ்மார்க் ஓட வேண்டும் நான். இப்போது சற்று விழித்துக் கொண்டேன். அசிஸ்டெண்ட் என்ற வார்த்தை காதில் விழுந்ததும் வெளியூரில் இருப்பதாக கூறிவிடுகிறேன். இந்த இடத்துல கட் பண்ணி ஒரு சாங்கை வைக்கிறோம் சார்!

கண்ணம்மாவுக்கு வருவோம். அவளிடம் திருமணத்திற்கு இட்லிகள் வேண்டுமென ஆர்டர் கொண்டு வருவார்கள். அத்தனை சாமான் செட்டுகள் இல்லீங்கொ! என்று சொல்லி அதை தட்டிக் கழித்து விடுவாள்.

முருகன் மூன்று நான்கு மாதங்கள் கடை ஆரம்பித்த புதிதில் மனைவியுடன் கூட மாட வேலை செய்து உதவிகரமாய்த் தான் இருந்தான். இப்போதும் உதவுகிறான் தான் என்றாலும் தினமும் மாலையில் சி-14 ஊத்துக்குளி பேருந்து ஏறி விடுவான். போதை ஏற்றிக் கொண்டு திரும்பவும் ஏழே முக்கால் என்று திரும்பிம் அதே பேருந்தில் வந்து இறங்கி விடுவான். இறங்கியதும் நடையில் தள்ளாட்டம் கூடி விடும். இந்தக்குடி எதுக்குடா? என்று உள்ளூர் ஆட்கள் கேட்பார்கள். ஆமாங்க குடி ஆவாதுங்க! குடி நம்மை அழிச்சிப் போடுமுங்க, என்பவன் அடிப்பாக்கெட்டில் இருந்து பாட்டிலை எடுத்து கோட்டரின் மூடி திருகி இரண்டு மடக்கு குடித்துவிட்டு செறுகிக் கொள்வான்.

ஆமாங்க, குடி வந்து நமக்கு ஆவாதுங்க! இன்னியோட தலை முழுவிடறனுங்கஎன்பான் மீண்டும். புத்தி சொல்ல வந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டு போவார்கள். மறுநாள் கேட்டாலும் அதே பதில் தான். நாளையில இருந்து மோந்து பாத்தன்னா ஏன்னு கேளுங்க!

இட்லிக்கடை வந்ததும் கண்ணம்மாவுக்கு பூஜை தான். ஆளுககிட்டச் சொல்லி என் குடியை நிறுத்தப் பாக்கியாடி? என்று குத்துவான். கண்ணம்மா ஷகிலாவின் உடம்பு வாகோடு இருப்பதால் கொஞ்சம் ஜமாளித்துக் கொண்டாலும் லொய்யோ லொய்யோ என்று கத்துவாள்.

அக்கா நானு நேத்து எட்டு மணிக்காட்ட கண்ணம்மா கடைக்கி போனேனா.. அவ ஊட்டுக்காரன் கும்மு கும்முன்னு நாலு குத்து வெச்சாம் பாருக்கா, எனக்கே மூச்சு அடைச்சிப்போச்சு. எப்படித்தான் அத்தனை ஈட்டை தின்னுட்டு அவங்கூட அவொ இருக்காளோ போக்கா! நானா இருந்தன்னா முண்டுக்கட்டையில நாலு போட்டு போடா நீயாச்சு உன் குடியாச்சுன்னு முடுக்கி உட்டுடுவேன்என்று பேசி கண்ணம்மாவின் நிலைமைக்காக உள்ளூர் பெண்கள் பரிதாபப்பட்டார்கள்.

தொட்டுத் தாலி கட்டின புருசன் ரெண்டு ஈடு போட்டா வாங்கித்தான ஆவணும் கண்ணு. அவுரு நல்ல மனுசன் தான். போதைஒயில தான் அவுரு பித்தி இசி திங்கப் போயிடுது. காத்தால பாத்துக்க, கிளியே, மணியே, தங்கமேன்னு கொஞ்சுவாப்ல!” என்றே கண்ணம்மா சொல்வாள்.

அன்றொரு நாள் உள்ளூர் பேருந்துக்கு காலையில் நல்ல கூட்டம் நின்று காத்திருந்தது. திருமண விசேசத்திற்காக அவர்கள் பெருந்துறை செல்ல வேண்டி இருந்ததால் நேரமாகியும் வராத பேருந்தை சபித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கண்ணம்மாவின் இட்லிக்கடை ஊரின் கிழக்கு கடைசியில் இருந்தது. அங்கிருந்து தான் அவல் தலைமுடி அவிழ்ந்து குய்யோ முய்யோ என்று ஓலமிட்டபடி பஸ் நிறுத்தம் நோக்கி ஓடி வந்தாள். இன்னிக்கி முருகன் காத்தாலயே பூசை போட்டுட்டான் போல இருக்குது பாவம்! என்று நிறுத்தத்தில் பெண்கள் பேசிக் கொண்டார்கள்.

கூட்டத்தினரை நோக்கி அலங்கோலமாய் ஓடி வந்தவள் ப்ந்ந்ருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்றுக்கிடந்த் நிழற்குடை கட்டிடத்தின் இரண்டு படிகளிலும் கால் வைத்து ஏறியவள் உள்ளே கண்மூடி அமர்ந்திருந்த தாடி வைத்த சாமியார் காலடியில் நெருஞ்சாண் கிடையாக விழுந்தாள். இதென்ன அதிசயம்? இந்த கிறுக்குப் பிச்சைக்காரன் காலில் வந்து இவள் விழுகிறாளே! என்று நினைத்த சில பெண்கள் ஆர்வமாய் நிழல்குடை ஓரம் ஒதுக்கமாய் நின்று ஆவலாய் பார்த்தார்கள்.

சாமி என் புருசன் எப்பப் பார்த்தாலும் நொட்டுக் கையை வச்சுக்கிட்டு என்னை நொங்கெடுக்கிறான் சாமி. இன்னிக்கி காத்தாலயே என்னை அடிச்சதோட விடாம ரெண்டு தண்ணிக் குடத்தை எடுத்து வாசல்ல வீசி ஒடச்சிப் போட்டான் சாமி!” என்று கண்ணம்மா அழுது புலம்பினாள் சாமியாரிடம். தாடியை நீவிக் கொண்டேஇருந்த சாமி கண்ணை விழித்து கூட்டத்தினரையும் தன் முன் கிடக்கும் பெண்ணையும் பார்த்தார். மடியில் கையை விட்டவர் திருநீறு பொட்டணம் ஒன்றை எடுத்து விரித்து விஒரல்களில் எடுத்துப்பூஎன்று கண்ணம்மாவின் மீது ஊதினார். கண்ணம்மா எழுந்து அவர்முன் கும்பிட்டபடி நின்றாள்.

நீ வடக்க இருந்து வந்தவள் தானே? உன் ஊர் சத்தியமங்கலம் தானே?”

ஆமாஞ்சாமி

உன் அப்பன் ஆயா இப்ப உசுரோட இல்ல. உன் புருசன் வெளி மாநிலத்துக்காரன் சரி தான?”

ஆமாம் சாமி, என் புருசன் ஊர் கேரளா

அப்படின்னா சேவல் ஒன்னை புடிச்சுட்டு பூசை சாமான் வாங்கீட்டு நீ அங்கியே இரு. பூஜைக்கு நான் கடைக்கு வர்றேன். பூஜை முடிஞ்சதும் சேவலோட ஒரு காலை நான் ஒடச்சிக்குவேன். நீ ஒரு கால் இல்லாத சேவலோட கடையை மூனு சுத்து சுத்தி வந்து கழுத்தை அறுத்து கொன்னு கொழம்பு வச்சு சாப்பிடு. புருசனுக்கு ஒத்தைக்காலையும், தலையையும் தின்னக்குடு. இப்பப் போ!” என்ற சாமி தின்நீரை இன்னொருமுறை ப்பூ என்ரு ஊதினார் அவளை நோக்கி. கண்ணம்மா முடியை அள்ளி முடிந்து சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு கிழக்கே நடந்தாள்.

சமயத்தில் பேருந்தும் வந்து நிறுத்தத்தில் நிற்கவும் சனம் ஏறிக் கொண்டது. நிறுத்தத்தில் இப்போது சாமியார் ஒருவர் தான். அவர் முகம் புன்னகைத்தபடி இருந்தது. “கிறுக்கன்னு நெனச்சிட்டுஇ இருந்தனக்கோவ்! சாமியாராட்ட இருக்குதுபேருந்தில் உள்ளூர் பெண்கள் பேசிக் கொண்டனர்.

இட்லிக் கடைக்கு கிழபக்கத்தில் சாமியார் பூஜையை வேப்பை மர நிழலில் ஆரம்பித்து விட்டார். கணிசமான கூட்டமும் கூடி நின்றிருந்தது. “எண்ட மலையாள பகவதி யம்மே!” என்று குரல் கொடுத்த சாமியார் சாம்பிராணி புகை மூட்டத்தில் மிதந்தார். சொன்னது போலவே கடைசியாய் சேவலின் ஒரு காலை ஒடித்து பச்சையாய் சாமியார் எல்லோர் முன்பும் தின்றான். சேவல் உயிரே போனது போல் கத்தியது. என்னைப் பாக்காம அப்படியே மூனு சுத்து சுத்து! என்றார். கண்ணம்மா கையில் எலுமிச்சை கனி ஒன்றை திணித்தார். பின் எப்போதும் போல் பீடி பிடித்துக் கொண்டு தன் இருப்பிடமான நிழல்குடைக்கே சாமியார் திரும்பி விட்டார்.

ஆச்சரியம் நடந்து தான் விட்டது. ஊரெங்கும் ஒரு வாரமாய் இதே பேச்சு தான். கண்ணம்மாவின் புருசன் முருகன் பெட்டிக்குள் பாம்பாய் அடங்கி விட்டான். குடியை விட்டொழித்து விட்டான். நாள் முழுவதும் கண்ணம்மாவோடு கடையில் கூடவே இருந்தான். “இலை போட்டுட்டேன் செல்லம், இட்லியை எடுத்துட்டு வா செல்லம்!”: என்று கொஞ்சல் போட்டான். அதை காது கொடுஇத்துக் கேட்டவர்கள் காதில் புகை வந்தது. சிலர் வெட்கத்தைக் கேட்டால் எட்டணா தருவேன் என்றார்கள். கிழக்கு வீதியில் ஒரு வாரமாய் கண்ணம்மாவின் ஓலக் குரல் கேட்பதில்லை. “ஏண்டா முருகா பஸ் ஏறிப்போய் குடிச்சுட்டு வருவே, நெசமாலுமே உட்டுட்டியா?” என்றார்கள். குடியின்னா என்னங்க எசமான்? என்றான் அவன்.

உள்ளூர் பெண்கள் சாமியாரின் சாமார்த்தியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள். “என்னோட ஊட்டுக்காரரு குடிய நிறுத்தவே மாட்டீங்கறாப்ல அக்கா, சேவல் ஒன்னு புடிச்சுட்டு சாமியார் கிட்ட போலாம்னு இருக்கேன்என்றாள் ஒருத்தி. “அடியே, ஆள் ஆளுக்கு சேவலை தூக்கீட்டு சாமியார்கிட்ட போய் நின்னம்னா ஊர்ல மத்த ஆம்பளைங்க சாமியாரை அடிச்சு ஊரைஉட்டு தொறத்திடுவாங்க. சத்தம் இல்லாம சாமத்துல காதும் காதும் வச்சா மாதிரி பண்ணைக்கணும்டி. இட்லிக்கடைக்காரன் மந்திரிச்சு உட்ட மாதிரி பொண்டாட்டி பின்னால சுத்துறதை பார்த்துட்டு என்னோட புருசன் என்னை அடியே புடியேன்னு பேசறதைக்கூட உட்டுட்டாருஎன்றாள் ஒருத்தி.

கிராமத்துப் பெண்கள் கிராமத்து பெண்களாகவே தான் இருக்கிறார்கள். அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளும் கிராமத்து பிள்ளைகளாகவே வளருகிறார்கள். இப்படிப் பேசப்பட்ட பேச்சுகள் ஒருநாள் எங்கு வந்து முடிந்தது தெரியுமா? ஊரில் திருவிழாவாகவே அது வந்து முடிந்தது.

ஊர் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கோவில் மைதானத்தில் வாடகப் பந்தல் போடப்பட்டிருந்தது. யாகம் வளர்ப்பதற்கு என்று கோவிலை ஒட்டி மேடை ஒன்று போடப்பட்டிருந்தது. உள்ளூர் மைக்செட் மகாலிங்கம் தன்னிடம் இருந்த ஏழு கொடை ரேடியோக்களை பந்தலின் மேல் கட்டி விட்டிருந்தான் இலவசமாக! எப்போதுமே எம்.ஜி.ஆர் பாடல்களை மட்டுமே ஒலிபரப்பும் அவன் இன்று, “கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா? கடல் அலையா?” என்று பக்திப் பாடல்களையே ஒலி பரப்பினான். ஓரம்பாரத்தில் பொம்மைக் கடைகள் குவிந்து விட்டன. ஐஸ் வண்டிக்காரர்கள் பேம் பேம் என்று பொவ்வாத் அடித்துக் கொண்டே சுற்றினார்கள் ஊரை. பலூன் வியாபாரம் சூடு பிடித்திருந்தது. எல்லாக் குழந்தைகளின் கயிலும் பலூன்கள் இருந்தன.

பக்கத்து கிராமங்களின் மக்களும், வெளியூர் ஆட்களும் ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாய் திரிந்தார்கள். ஆளாளிற்கு குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ஆய்ரம் ரூபாயல்லவா சாமியார் கையில் தங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டுமென கொடுத்திருந்தார்கள்! எழுபத்தி ஐந்தாயிரம் மொத்தவசூல் என்று பேசிக் கொண்டார்கள். சாமியார் யாகம் வளர்க்க குறித்துக் கொடுத்த தேதி இன்றுதான். ஆடம்பரம் வேண்டாம் என்று சாமியார் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். ஆனாலும் மக்கள் அவர் வார்த்தையை கேட்கவா செய்தார்கள்? சரி இது எப்படி நடந்தது?

வழக்கம் போல தாடிச்சாமியார் பேருந்து நிறுத்த குடையின்கீழ் பீடி பிடித்தபடி சும்மா அமர்ந்திருந்தாலும் உள்ளூர்வாசிகள் அவரை சும்மா இருக்க விட்டார்களா? எனக்கு அப்படி சாமி! இப்படி சாமி! என்று ஆளாளுக்குப் போய் அவர் முன் நின்றால்? தனித் தனியாக அவர் எத்தனை பெருக்கு பூஜை செய்வார்?

இன்னும் முப்பது நாளில் ஆறு சாவுகள் ஊருக்குள் நடக்கப் போகிறது. இந்த ஊர் பெண்களுக்கு திருமண யோகம் கூடி வராததற்கு காரணம் இருக்கிறது! என்று சாமியார் அவர்களிடம் அடுக்கிச் சொல்ல எல்லோரும் மிரண்டார்கள். என்ன செய்யலாம் சாமி? என்றார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் நாள் ஒன்றைக் குறித்து அன்றே அவைகளை ஒட்டு மொத்தமாக தீர்த்து விடுவதாக கூறி விட்டார். வீட்டுக்கு தலா ஆயிரம் என்று நிர்ணயம் செய்தார். விசயம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவி அவர்களும் ஓடி வந்து சாமியாரின் கையில் பணத்தை திணித்துப் போனார்கள்.

பூஜை நேரம் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது. தாடிச்சாமியார் முக்கியமான பொருள் வாங்க உள்ளூர் பெரிசுகளிடம் சொல்லி விட்டு ஈரோடு நேற்று மாலை கிளம்பிப் போனவர்தான். ஒரு வார காலம் சிக்கன், முட்டை என்று தொடாமல் ஊரே பத்தியச் சாப்பாட்டில் இந்த யாகத்திற்காக நாக்கு செத்துப்போய் பக்தியை முடித்துக் கொள்ளும் பரவசத்தில் இருந்தார்கள். இதில் குடிகாரர்கள் வேறு ஒரு வாரம் ஊர் நன்மைக்காக குடியை விட்டிருந்தார்கள். பத்தியம் அவர்களுக்கும் தான். எல்லாமே சாமியாரின் கட்டளைப்படி தான். நேரம் ஆக ஆக ஆள் ஆளுக்கு சாமியார் மாயமானது பற்றி பேசத் துவங்கினார்கள்.

டவுனில் இருந்து பத்தரை சி-14 பேருந்தில் வந்து இறங்கிய முருகேசன் தான் உள்ளூர் பெருசுகளை தனியே கூட்டிப் போய் விசயத்தை சொன்னான். சாமியாரை ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் பார்த்தபோது அவனுக்கு அடையாளமே தெரியவில்லையாம். கேரளா எக்ஸ்பிரஸ் பெட்டியில் கண்ணம்மா மடியில் ஜீன்ஸ் பேண்ட் பனியன் போட்டபடி தாடியில்லாமல் சாமியார் படுத்திருந்தானாம். பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் கேன் வாங்கிக் கொண்டு முருகன் ஓடிப்போய் பெட்டியில் ஏறவும் எக்ஸ்பிரஸ் கிளம்பி விட்டதாம். கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகள் முகத்தின் முன் ஆடவில்லை.

சாமியார்கள் எப்போதும் புதுசு புதுசாகத்தான் சிந்திக்கிறார்கள். மக்கள் அவர்களை மலைபோல் நம்பி ஏமார்ந்து விடுவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. முதலில் சாமியார் புகழைப் பரப்ப ஊர் ஊராய் யாரோ போய்க் கொண்டிருக்கிறார்கள். ஈரோடு முத்தூர் அருகே ஒரு பெண்மணி இப்படி சாமியார் சொன்னதை செய்ததால் கார், பங்களா, என்று வசதியாய் இருப்பதாக சொல்லிச் சென்றாள். சாமியார் யாரடா என்றால் முருகன் போல சிறுவனாம். ஒரு மாதம் கழித்து அந்தச் சிறுவன் காவி உடையுடன் தெருவில் கண்ட ஊரார் இவன் தானோ அந்த கார்ப் பெண்மணி சொன்னவன்? என்று அவனிடம் பணத்தை இறைத்து ஏமார்ந்தார்கள்.

நான்கு ஆள் உயரமுள்ள ஏணீயை நிலத்தில் பதித்து அதன் உச்சியில் அமர்ந்து ஊரார் முன் ஒரு சாமியார் தவத்தில் அமர்ந்தாராம். அவரது சிஷ்யப்பிள்ளைகள் மண் மூட்டையிலிருந்து குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு ஒரு குத்து மண் அள்ளி கொடுத்து மூன்று நாள் தண்ணீரில் கலந்து குடிக்குமாறு சொல்லி வசூல் வேட்டை நடத்திவிட்டு போய் விட்டார்கள். இப்படி சாமியார்களும் காலத்திற்கு ஏற்ப தங்கள் பராக்கிரம செயல்களை டிசைன் டிசைனாக மாற்றிக் கொண்டே ஊர் ஊராக சுற்றுகிறார்கள்.

ஏமார்ந்தவர்கள் இருக்கும் வரை ஏஆற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!

சிலம்போசை ஆகஸ்டு 2012

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book