இருக்கிறார்கள் மனிதர்கள்

இப்படி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வோம் என்று ரூத் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்படியான சூழாலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூடத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு ஆதரவற்று நின்றிருந்தாள். எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை என்று கோவையில் இருக்கும் இவள் அக்கா தான் அடிக்கடி சொல்வாள். இப்போது தான் ரூத்திற்கு அந்த வார்த்தையின் முழு அர்த்தமும் தெரிந்தது.

ரூத்தின் பதட்டத்திற்கு காரணம் பிட்டர் ஐயா இறந்து விட்டது தான். கடந்த நான்கு மாதமாக அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரைகளையும், டானிக்குகளையும் கொடுத்து கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணாய்த் தான் டெய்ஸியம்மா இவளை நியமித்திருந்தாள். டெய்ஸியம்மா வேறு யாருமில்லை. பீட்டரின் மனைவி தான். இருவருக்கும் வயது வித்தியாசம் என்று பார்த்தால் பதினைந்து வருடங்களாவது இருக்கும். டெய்ஸியம்மாவின் தலைமுடிக்கற்றைகளில் ஒன்றிரண்டு இப்போது தான் நரைக்கத் துவங்கியிருந்தன.

இந்த ஈரோடு நகரில் அரசாங்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் டெய்ஸியம்மாவுக்கு வயது நாற்பத்தியெட்டு ஆகிறது. ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பீட்டர் ஐயாவை இவள் மணந்து கொண்டபோது வயது இருபத்தி நான்காம். இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் தன் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட உதிக்கவில்லையே என்ற ஏக்கம் டெய்ஸியம்மாவின் மனதில் இருப்பதை வந்த கொஞ்ச நாளில் ரூத் உணர்ந்து கொண்டாள்.

பீட்டர் ஐயா ஒரு இதய நோயாளி. பணம் உள்ளவர்களுக்கு கடவுள் ஏதோ வகையில் நோயையும் கொடுத்து அவர்களை அவஸ்தைக்கு உள்ளாக்கி விடுகிறார் என்றே ரூத் நினைத்திருந்தாள். ஆனாலும் இது டெய்ஸியம்மாவின் குடும்பத்திற்கு அதிகம் தான் என்றும் நினைத்தாள். ஏற்கனவே குழந்தை பாக்கியத்தை கடவுள் பறித்துக்கொண்டாரே! பின் எதற்காக இந்த வியாதியும்?

நோயாளிக் கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்ற பேப்பர் விளம்பர வரிகளைக் கவனித்துத் தான் ரூத் தன் அக்காவிடம் அதை காட்டினாள். அது மளிகைக் கடையில் கடலை மாவு வாங்கி வருகையில் அதைக் கட்டிக்கொடுத்த காகிதம். எந்த மாதத்தின், எந்த வருடத்தின் துண்டுப்பேப்பர் என்று கூட இவளுக்கு தெரியாது. இருந்தும் அக்கா வீட்டில் தனக்கிருக்கும் பிரச்சனைகளை மனதில் உணர்ந்தவளாய் விளம்பர வாசகங்களின் கீழ் இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டாள்.

ரூத் தான் பனிரெண்டாவது வரை படித்த விசயத்தையும், மேற்கொண்டு படிக்க இயலாத வறுமையையும், அப்பா, அம்மா தன்னை விட்டுப்போன துக்கமான செய்தியையும் அக்காவின் கணவர் தன்னை இரண்டாவது மனைவியாக அடைய வலை விரித்திருப்பதையும் எதிமுனையில் கேட்டுக் கொண்டிருந்த டெய்ஸியம்மாவிடம் விவரித்தாள். எல்லா தகவல்களையும் கேட்டுக் கொண்ட டெய்ஸியம்மா பெருமூச்சு விட்டாள்.

அந்த விளம்பரத்தை பேப்பரில் கொடுத்து ஒரு மாத காலம் ஆகி விட்டதாகவும், ஒன்றிரண்டு பெண்கள் இரண்டாயிரம் என்ற சம்பளத் தொகை போதாது என்றதாகவும், வீட்டிலேயே தங்கிக் கொள்ளும் யோசனையை அவர்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறியவள் இதற்கெல்லாம் சம்மதமா? என்று கேட்கவும் ரூத் உடனே சம்மதித்தாள்.

மேலும் டெய்ஸியம்மாவின் குரல் இறந்து போன தன் அம்மாவின் குரலை ஒத்திருப்பதையும் உணர்ந்தாள். அக்கா தன் ஒரே தங்கையை இப்படி அனுப்புவதற்காக அழுதாள். மாறாக வேறுவழி ஏதுமில்லாத நிலையை எண்ணியும் அக்கா அழுதால். அழுவதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

டெய்ஸிஅயம்மா ரூத்தை தன் குடும்பத்தில் ஒருத்தியாகவே பாவித்தாள். அவர்களுக்கு குழந்தை என்று பிறந்து அதுவும் பெண்ணாக இருந்திருந்தால் தன் வயது தான் இருக்கவேண்டும் என்று ரூத் நினைத்துக் கொண்டாள். போதாதற்கு பீட்டர் ஐயா எந்த நேரமும் கட்டிலில் இருந்தாலும் இவளை, ‘வா மகளேஎன்றே தான் குரல் நடுங்க கூப்பிடுவார். மாத்திரைகள் மீது அவர் தீராத வெறுப்பு கொண்டிருந்தார். சிறு குழந்தைகள் அடம்பிடிப்பது போன்றே முகத்தை திருப்பிக் கொண்டார். வயதானவர்கள் குழந்தைகள் தான் என்று எங்கோ படித்த நினைவு இவளுக்கு வந்தது.

வந்த சில நாட்களில் தன்னை அந்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்டாள் ரூத். டெய்ஸியம்மா தினமும் பள்ளிக்கு கிளம்பும் சமயம் வீட்டை உள்புறமாக தாழிட்டுக் கொள், ஏதாவது அவசரம் என்றால் செல்போனிற்கு கூப்பிடு, வீதியில் காய்கறிக்காரன் சென்றால் குரல் கேட்கும், போனமுறை முற்றிப்போன கத்தரி, வெண்டையை பொறுக்கி எடுத்துவிட்டாய்! என்று ஏதாவது விசயத்தை இவளிடம் சொல்லிச் சென்றாள்.

ஏனோ தனக்கு சம்பளம் தரும் எஜமானியம்மாவின் குரல் போல டெய்ஸியம்மா சொல்லும் பேச்சுகளை இவள் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மாவே சொல்லிச் செல்வதாய் உணர்வாள். ஆனால் இதுவெல்லாம் எத்தனை நாளைக்கு? என்ற கேள்வி அவளுக்குள் இருந்து கொண்டு மிரட்டிக் கொண்டேயிருந்தது.

முதல் மாத சம்பளப்பணம் உனக்கு! என்று டெய்ஸியம்மா இவளிடம் கவரை நீட்டிய போது அதை கைநீட்டி வாங்கிக் கொள்ள கூச்சப்பட்டாள் ரூத். ’உங்ககிட்டயே இருக்கட்டும்மா! எனக்கு இப்போ எந்த செலவும் இல்லை. பின்னாடி வாங்கிக்கறேன் எனக்கு தேவை என்கிற போதுஎன்று சொல்லிவிட்டு அங்கே நிற்கப்பிடிக்காமல் சமையல் அறையில் வேலை இருப்பது போல் நுழைந்து கொண்டாள். டெய்ஸியம்மா ரூத்தை வற்புறுத்தி வாங்கிக்க ரூத்என்று சொல்லவில்லை. பின்வந்த மாதங்களில் ரூத்திற்கு சம்பளம் தரவேண்டுமென்ற எண்ணமே இல்லாத ஒரு பெண்மணியாகவும் டெய்ஸியம்மா மாறிப்போனாள்.

பீட்டர் ஐய்யா நல்ல உறக்கத்தில் இருகிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்த ரூத் வீட்டில் கீழ் ஹாலில் ரமணிசந்திரன் நாவல் ஒன்றில் ஆழ்ந்திருந்தால். அந்த நாவலில் இவளைப்போன்றே ஒரு பெண் ஒரு நோயாளியை கவனிக்கும் பொறுப்பில் இருந்தாள். ஐந்துமணியைப் போல எப்போதும் அவர் விழித்துக் கொண்டிருப்பார் என்றே மாடிப்படிகள் ஏறிச் சென்றாள். அவர் அரையில் நுழைந்தவள் எதேச்சையாகத்தான் அவர் உதட்டினோரம் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை கவனித்தாள்.

பதை பதைத்து கட்டிலின் அருகே ஓடிச் சென்று, ‘ஐயா! ஐயா!’ என்று கூப்பிட்டுப் பார்த்து ஏமார்ந்தாள். சவத்தின் களை அந்த முகத்தில் ஒட்டியிருந்தது. நாசித்துவாரம் அருகே விரல் வைத்துப் பார்த்தால். அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மகளே! என்றழைக்கும் பீட்டர் ஐயா அல்ல அவர். பிணம்! சுவாசிப்பதை நிறுத்திக் கொண்ட உடல். பயந்து போய் அறையை விட்டு வெளியேறியவள் படிகளில் நிதானமின்றி கீழிறங்கி ஹாலில் ஷோபாவில் வந்தமர்ந்தால். அவள் இதயம் தாறுமாறாக துடித்தது.

ரூத் வந்த நாளில் இருந்து சொந்தம் என்று சொல்லிக் கொண்டு யாரும் டெய்ஸியம்மாவின் வீட்டுக்கு வரவில்லை. மேலும் தனக்கு இன்ன இன்ன ஊரில் இப்படி இப்படி சொந்தம் இருக்கிறது என்றும் கூட டெய்சியம்மா சொல்லி இவள் கேட்டிருக்கவில்லை.

இருந்தும் ஹாலில் போன் அருகே இருந்த நீலவர்ண டைரியில் இருந்த பத்து, இருபது எண்களுக்கும் ரிங் அடித்து இந்த மாதிரி இந்த மாதிரி என்று சரியாய் வார்த்தை வெளிவராமல் தயங்கித் தயங்கி தகவலைச் சொன்னாள். அவர்கள் எல்லோருமே யாரம்மா நீ? என்றே கேட்டார்கள். இவளுக்கு பதில் சொல்ல சிரமமாய் இருக்கவே நர்ஸ் என்றாள். அவர்களோ பீட்டர் பாடி எங்கிருக்கு? ஹாஸ்பிடல்லயா? வீட்டுலயா? என்று கேட்டுத் துழைத்தார்கள்.

இடையில் ஒரு எண்ணில் பேசியவர் ஆசிரியை போல் உள்து. ’போச்சா! சென்னை போக வேண்டாமடி வீட்டில் இப்படி இருக்கும் போது என்றேன். அவள் கேட்கவேயில்லை. டெய்ஸிக்கு தகவல் சொன்னியாம்மா?’ என்றார். ‘அவங்க செல்போன் லைனே கிடைக்க மாட்டிங்குதுஎன்றாள் ரூத். ‘எப்படி கிடைக்கும்? ட்ரெய்ன்ல போறப்ப அவ்ளோ சீக்கிரம் கிடைக்காதே! எதுக்கும் நானும் ட்ரை பண்ணுறேன்என்றவருக்கு தேங்ஸ் சொன்னாள் ரூத். இவள் போனை வைத்ததும் அது நீளமாய் அலறியது. எடுத்து ஹலோ! என்றாள் ரூத்.

நான் டெய்ஸி பேசுறேம்மா ரூத்.. சென்னையில இப்போத்தான் இறங்கினேன்என்று அவர் பேசத்துவங்கியதுமே இவள் அழத் துவங்கினாள். டெய்ஸியம்மா இவள் அழுகையிலேயே உணர்ந்து கொண்டாள். ‘கூட வேலை செய்யுற டீச்சர் பொண்னோட கல்யாணமுன்னு கிளம்பினேன் பாரு. வேண்டாம் வேண்டாமுன்னு சொன்னாங்க. கேக்காம மடச்சி நான்என்று டெய்ஸி தன்னையே நொந்து கொண்டு அழத் துவங்கினாள் போனில். கடைசியாக, ‘சரி சரி நான் திரும்பிடறேன்என்றவர் போனை கட் செய்து கொள்ளவும் இவள் ரிசீவரை வைத்துவிட்டு கண்னீரைத் துடைத்துக் கொண்டாள்.

ஆண்கள், பெண்கள் என சிறு கூட்டம் வீட்டினுள் நுழைந்ததும் இவளுக்கு சற்று தெம்பு வந்தது. அவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கல் பீட்டர் ஐயாவைச் சுற்றிலும் மெளனமாய் நின்று கொண்டார்கள். வந்தவர்களுக்கு காபி தயாரிக்கலாமா? குடிப்பார்களா? என்ற சந்தேகத்தில் கைபிசைந்து நின்றாள். எல்லோருமே கருங்கல்பாளையம் உள்ளூர் தான் போலுள்ளது. அவர்கள் எல்லோரையும் இப்போது தான் முதலாய் பார்க்கிறாள்.

அவர்களுக்கும் இவள் யார்? என்ற விபரம் தெரியாமல் இவளிடம் துக்கம் விசாரிக்க தயங்கினார்கள். டீச்சரைக் கேட்டார்கள். இவள் விசயத்தை சொன்னதும், ’எப்படியும் இனி காலையில் தான் வந்து சேருவாங்க! காத்தால வந்து பார்த்துக்கலாம் என்று அவர்களாகவே பேசிக் கொண்டு படியிறங்கினார்கள்.

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மேலும் இரண்டு மூன்று பேர் வந்தார்கள். இழவு விழுந்த வீடு மாதிரியே தெரியலையே, ஏப்பா வந்த போனு நெசமாப்பா? என்று பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்களையும் மேலே கூட்டிப்போய் பீட்டர் ஐயாவின் சடலத்தை காட்டினாள். ஒருவர் மட்டும் நிலமையை புரிந்து கொண்டு ஐஸ்பெட்டிக்காரனுக்கு தகவல் கொடுத்தார்.

பதினைந்து நிமிடத்திற்குள் மினி ஆட்டோவில் கண்னாடிப் பெட்டி வந்து சேர்ந்தது. அவர்கள் ஐயாவை பெட்டியினுள் படுக்கவைத்து விட்டு காலையில் வருவதாக சொல்லி போய் விட்டார்கள். நேரமும் இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ஐஸ் பெட்டிக்கு ஏற்பாடு செய்த நபரும், ‘நான் போறேன்மாஎன்றபோது இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு பயமாயிருக்கு இருங்க இங்கேயே! என்று எப்படி அவரிடம் சொல்வாள்?

அவரும் சென்ற பிறகு ரூத் என்றுமில்லாத நிரந்தரத் தனிமையை உணர்ந்தாள். மேலே பெட்டியில் இருக்கும் பிணத்தின் நினைப்பை மறக்க முடியவில்லை. ரூத் சின்னவயதிலிருந்தே பிணம் என்றால் பேய் என்று பயப்படுவாள். பிணம் வீதியில் சென்றால் கூட அந்த வீதியில் நடக்க மாட்டாள். விதவிதமான கற்பனைகள் அவள் மனதில் தோன்ற ஆரம்பித்தன. ஐயாவின் உயிர் இந்த வீட்டில் சுற்றிக் கொண்டிருக்குமோ என்று அச்சம் கொண்டாள்.

வெளியே இவர்களின் வளர்ப்பு நாய் திடீரென குரைக்கத் துவங்கியது. ’டாமி சும்மாயிருஎன்றாலும் அது இடைவிடாமல் குரைத்தது. வீட்டுக்கு பலர் வந்து போனதை அது புதிதாய் கண்டதால் அப்படி குரைத்தது. சமயத்தில் மின்சாரம் வேறு போய் விட்டது. கருங்கல்பாளையமே இருட்டில் மூழ்கி அமைதியானது.

ஹாலில் டெலிபோன் அலறல் துவங்கியது. இரவு என்பதால் அதன் ஒலி கணீரென கேட்டது. ரூத் பயத்துடன் இருட்டு ஹாலில் டெலிபோன் நோக்கிச் சென்று அதை காதில் எடுத்து வைத்தாள். டெய்ஸியம்மா தான். மாடியறையில் ஐயாவின் டேபிள் மீது சிவப்பு வர்ண டைரி இருப்பதாகவும் அதில் முதல் பக்கத்தில் பச்சை வர்னத்தில் மூன்று போன் எண்கள் இருக்குமெனவும் அவர்களுக்கு உடனே தகவல் சொல்லிவிடு என்றும் சொல்ல இவள் தன் நிலையை சொல்ல ஆரம்பித்த போது கட்டாகி விட்டது. ரூத் மெழுகுவர்த்தி மூன்றை பற்ற வைத்து அறையில் ஒளி ஏற்றினாள்.

மனதை திடமாக்கிக் கொண்டு கையில் பிடித்திருந்த மெழுகுவர்த்தியுடன் மாடிப்படிகள் ஏறினாள் ரூத்.டெய்ஸியம்மா சிவப்பு நிற டைரியை அந்த அறையிலா வைத்திருக்க வேண்டும்? தன் பின் கழுத்துக்கு அருகே யாரோ பெரிதாய் மூச்சு விடுவதைப் போன்று உணர்ந்து திடுக்கிட்டு நின்றாள். பிணம் இருக்கும் பக்கம் பார்க்கவே கூடாது, பார்க்கவே கூடாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டே ஐயாவின் அறையில் நுழைந்தவள் பார்வை பிணத்தை நோக்கித் தான் சென்றது.

வீல் என்று அலறியவள் மெழுகுவர்த்தியை இறுக்கமாய் பிடித்துக் கொண்டே கண்ணிமைக்கும் நேரத்தில் படியிறங்கி தட தடவென வந்தவள் ஹாலையும் தாண்டி வெளி வாயிலுக்கு வந்தாள். இது தனக்கு தேவையா? என்ற பச்சாதாபத்தில் வீறிட்டு அழத் துவங்கினாள். நாய் இன்னமும் இருட்டை நோக்கி குரைத்தபடி தான் இருந்தது. சமயத்தில் மின்சாரம் வந்ததும் தெருவிளக்குகள் பளீரிட்டன.

வாசல்படியில் குனிந்த வாக்கில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள் முன்பாக ஜான்சன் வந்து நின்று, ‘ஏங்க!” என்றான். ஜான்சன் எதிர் வீடு தான். அவனும் அவன் அம்மாவும் மட்டுமே இருப்பது இவளுக்குத் தெரியும். டெய்ஸியம்மா இவனைப்பற்ரி நல்லவிதமாய் சொல்லியிருக்கவில்லை. மனைவியைக் கொன்று தூக்கில் தொங்க விட்டவன் என்று தான் சொல்லியிருந்தார்.

இப்போது தன் எதிரே நிற்கும் அவன் முகம் பார்த்தால் முகப்பு விளக்கில் ரூத். இப்போதைக்கு இவனாவது கிடைத்தானே என்று முகத்தை துடைத்துக் கொண்டாள். ‘நீங்களா இப்ப பயந்து கத்துனீங்க?’ என்றவனிடம் விசயம் பூராவும் சொன்னாள். கடைசியாக மாடியில் இப்போ வேற பிணம் கிடக்கு! என்றாள்.

உங்களுக்கு பயம்.. வேற பிணம் எங்க இருந்துங்க வந்துச்சு? அவரோட உடல் கறுத்துப் போயிருக்கும். சரி வாங்க நான் அந்த டைரியை எடுத்துத் தர்றேன்என்றவனை வீட்டினுள் கூட்டிப் போனாள் ரூத். மாடியேறிச் சென்று பீட்டர் ஐயாவின் அறைக்கு வெளியே நின்று கொண்டாள். ஜான்சன் அறைக்குள் சென்று டேபிளின் மீதிருந்த டைரியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

எதிர் வீட்டுல பத்து வருசமா இருக்கேன். இன்னிக்கித் தான் இந்த வீட்டுக்குள்ள வர்றேன். எந்த நேரமும் இந்த வீடு பேய் வீடு கணக்கா சாத்தியே கிடக்கும். அந்த டீச்சர் யார் கிட்டவும் பேச்சே வெச்சுக்க மாட்டாங்கஎன்று பேசிக்கொண்டே ஹாலுக்கு இருவரும் வந்தார்கள். டைரியில் இருந்த எண்களுக்கு ஜான்சனே தகவலைச் சொன்னான்.

இப்போது இவனை முழுதாக நம்பலாமா? என்ற பயமும் இவளுக்கு. பெரிய வீடு, தனியாக வேறு நானொருத்தி, இரவு மணி வேறு ஒன்பதை தாண்டிவிட்டது. இவன் கொலைகாரன் என்று வேறு அம்மா சொன்னதே! வாழ்நாளில் ஒரே நாளில் இத்தனை பயங்களுடன் ஒரு நாளைக்கூட கழித்ததே இல்லை என ரூத் நினைத்தாள்.

சாப்பிட்டு இருக்க மாட்டீங்க நீங்க, வாங்க எங்க வீட்டுக்கு. அம்மா இருக்கு. கூட்டாஞ்சோறு தான் இன்னிக்கி எங்க வீட்டுலஎன்றவனிடம் பசிக்கலைஎன்றாள். ‘பிணம் இருந்தா உங்களை அது என்ன பண்ணுது? அதுக்காக பசியோட இருக்கணுமா?’ என்றான் ஜான்சன். ‘பயந்து பயந்தே எனக்கு வயிறு நிரம்பிடுச்சுங்கஎன்றாள் ரூத். அவன் சிரித்தான்.

இவனா மனைவியை கொன்றிருப்பான்? ‘எங்கம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேனுங்க. போனவனை காணோமுன்னு இருப்பாங்க. மறுபடியும் பயந்து கத்திடாதீங்கசிரித்தபடி சொல்லிவிட்டு சென்றவன் திரும்பி வருகையில் கையில் ஹார்லிக்ஸ் டம்ளரோடு வந்தான். இவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். கடைசிக்கு இவனாவது என் பயத்தை உணர்ந்து துணைக்கு வந்தானே! என்றிருந்தது.

ஜான்சன் ஒரு ஷோபாவிலும், ரூத் ஒரு ஷோபாவிலும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்தபடி அமர்ந்து கொண்டார்கள். டிவி பார்ப்போமா? என்றவனிடம்பிணம் இருக்குற வீட்டுல தப்புங்கஎன்று சொன்னதும்சரிஎன்ரு சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டான் ஷோபாவில்.

இவள் தன் வாழ்க்கைச் சுருக்கத்தை அவனிடம் சொல்லி முடித்தாள். அவனைப் பற்றியும் விசாரித்தாள். தனியார் பேருந்தில் டிரைவர் என்றும், பிடிவாதக்காரியை மணந்து கொண்டு வாழ்க்கையில் பட்ட வேதனைகளை மறக்கவும், மறுக்கவும் முடியாமல் சொன்னான். அல்ப விசயத்துக்காக தூக்குப் போட்டுக் கொண்டவளை இன்னமும் மன்னிக்க தயாரில்லை என்றான். அப்படியே தூங்கியும் போனான்.

மனதில் வஞ்சகமும் கவலைகளும் இல்லாதவர்கள் தான் படுத்தவுடன் தூங்குவார்களாம். இதை ரூத் எண்ணிக் கொண்டாள். இவனும் இங்கில்லை என்றால் விடிவதற்குள் பயத்தில் தானும் செத்திருப்போம் என்று யோசித்துக் கிடந்தவள் கண்ணயர்ந்தாள்.

டெலிபோன் சப்தம் கேட்டு திடுக்கென விழித்தவள் எழுந்து போய் ரிசீவரை எடுத்து காதுக்கு வைத்தால். ’ஈரோடு வந்து இறங்கிட்டேன்மா. கால்மணி நேரத்துல ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்என்று டெய்ஸியம்மா தான் பேசியது. மணியைப் பார்த்தால். அது விடிகாலை நான்கை காட்டியது. ஜான்சனும் டெலிபோன் சப்தத்தால் எழுந்து கொண்டான்.

முகத்தை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே எழுந்தவன், ‘அந்தம்மாவுக்கு என்னை பார்த்தால் பிடிக்காதுங்க. அவங்க வர்றப்ப நான் இங்க இருக்கலை நான் கிளம்புறேன்என்று சொல்லி வெளி வாயில் நோக்கி சென்றவன் பின்னால் சென்றவள்தேங்ஸ்சொன்னாள்.

டெய்ஸியம்மா வீடு வந்து சேர்ந்த பிறகுதான் ரூத் நிம்மதியானாள். விடிகாலையில் சொந்தம் பந்தம் என்று கணிசமான கூட்டம் வீட்டில் சேர்ந்து விட்டது. காரியங்கள் துரிதமாய் நடைபெறத் துவங்கின. இந்த விட்டில், தான் யார்? என்று தெரியாமல் ஒதுக்கமாய் நின்றிருந்தாள் ரூத். அன்று பத்துமணி அளவில் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த அமரர் ஊர்தியில் பீட்டர் ஐயாவின் உடல் ஏற்றப்பட்டு ஊர்தி கிளம்பிப் போயிற்று.

ரூத்திற்கு நடந்து கொண்டிருந்த விஷயங்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் இருந்தன. மதியம் ஒருமணி என்கிறபோது லாரி ஒன்றினுள் வீட்டினுள் இருந்த சாமான்கள் ஏற்றப்பட்டு அது கிளம்பிப் போயிற்று. மீண்டும் ஜாமான்கள் மீதம் இருந்ததால் டெய்ஸியம்மாவின் தங்கையின் கணவர் இன்னுமொரு மினி லாரியை வரவழைத்தார். அவர்களின் குடும்பம் சென்னிமலையில் இருக்கிறதாம். டெய்ஸியம்மா தங்கையோடு தங்கிக் கொள்வதாய் ஏற்பாடாம்.

அவர் சம்மதித்த்தும் காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்தன. இந்த வீட்டை டெய்ஸியம்மாவின் சொந்த வீடு என்று தான் இவள் இதுநாள் வரை நினைத்திருந்தாள். ஆனால் வாடகை வீடாம். மாதம் மூன்றாயிரமாம். ஐய்யோடா என்று நினைத்தாள் ரூத்.

இறுதியாக மாருதி வேன் ஒன்று வந்து வீட்டின் முன் நின்றதும் டெய்ஸியம்மாவை அவரது தங்கை வீட்டினுள்ளிருந்து கூட்டி வந்தார். இவள் சோக முகமாய் அவர் முன் போய் நின்றாள். ரூத் டெய்ஸியம்மாவிடம் தனக்கான பணத்தை கேட்டாள். அதை அந்த சமயத்தில் கேட்க சங்கடம் தான் என்றாலும் கையில் எதுவுமில்லை என்பதால் அப்படி கேட்டாள்.

நீ தாண்டி ஐயாவை கொன்னுட்டே! கடைசி நேரத்துல என்ன துடி துடிச்சாரோ? உன்னால தாண்டி அவரு செத்தாருஎன்ரு கத்திப் பேச ஆரம்பித்த டெய்ஸியம்மா முன் உதடு பிதுங்கி அழத்துவங்கினாள் ரூத். வேனில் டெய்ஸியம்மா ஏறியதும் அழுது கொண்டிருந்த இவளை கூப்பிட்டார். ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை வேனில் இருந்தபடி கைநீட்டி இவளுக்கு கொடுத்தாள் டெய்ஸியம்மா. அதை இவள் வாங்கிக் கொண்டதும் வேன் கிளம்பிப் போயிற்று.

ரூத் காலியாயிருந்த வீட்டினுள் சென்று தன் துணிமணிகளை சூட்கேசில் திணித்துக் கொண்டு வெளிவந்தாள். எதிர் வீட்டு வாசலில் இருந்து ஜான்சன் இவளைப் பார்த்தபடி வந்தான். அவனைப் பார்த்த்தும் இவள்வென அழத்துவங்கினாள். ‘அழாதீங்க! இன்னும் நீங்க என்ன சின்னப் பிள்ளையா?’ என்றவன் தோளில் சாய்ந்து கதறினாள்.

என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறீங்களா?” அழுகையினூடே அவனைக் கேட்டாள் ரூத்.

000

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book