ஒரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள்.

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

“”ஏண்டி ருக்குமணி… உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்” என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது.

“”என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி” என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு.

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான்.

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது”

“”ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!” என்றாள் ருக்குமணி.

“”அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்”

“”அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?”

“”நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே… சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க… தெரியாதா உனக்கு?” என்றாள் சிந்தாமணி.

“”எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!” என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி.

“”பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா!

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்” என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

“”நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட?

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.” என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

“”ஏண்டா துரையரசு… நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு… நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க …பாவம்… அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல” என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.

“”முருகேசா முருகேசா… ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?”

“”மீனாட்சி… என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது… டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு… இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி… எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி… நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு… நான் செத்துப் போயிட்டா… எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க… எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது” என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

“”ஐயோ என் சாமி… இப்படி நாரா கிடக்குதே!” அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, “”அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா… போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு… நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்…” என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், “”பயப்படாதப்பா… உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது…” என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

“”வாடா அப்புக்குட்டி… காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்… அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு…”

“”சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க… உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க”.

“”என்னடா சொல்றே?”

“”பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி” என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

“”அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க… எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்… இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்… மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது.

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ”

“”சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே… எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி…”

“”மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்… இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு… கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா… சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல… அந்த ஐநூறோட… என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்… நாளை  மறுநாள் வாடா” என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன.

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

“”இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே… ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?” சரஸக்காதான் அவனிடம் கேட்டது! “”அதான பாருங்கக்கா” என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

“”உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா… ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

“”இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா… தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க… இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்… இவுரு தான அப்புக்குட்டி?” என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், “”சாமி நான் தானுங்க” என்று அவர் காலில் விழுந்தான்.

“”இதென்ன பழக்கம்?” மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் “கொல்’லென்று சிரித்தார்கள். “”எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்” என்றார்கள்.

“”எந்திரிப்பா மொதல்ல நீ… இந்தா இந்தப் பணத்தைப் பிடி… எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க… உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க”…

“”சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு!

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி”.

“”உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு… நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?” என்றார் சண்முகம்.

“”இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி… சத்தியமா இனி தொடமாட்டனுங்க!” என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

“”உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா… நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?” என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். “எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்’ என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

000

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book